Feb 09

ஈழத் தமிழர் வாழ்வில் இன்னுமொரு தேர்தல்

வாக்குச் சேர்க்க வருகிறார்கள். உண்மையறியாத மக்களை எப்படியும் ஏமாற்றலாம், அண்டப்புளுகுகளை பொய்களை அவிழ்த்து விட்டால் , பசுக்களைப் புலிகள் என்றும் புலிகளைப் பசுக்கள் என்றும் நம்ப வைக்கலாம்.மக்கள் எக்கேடு கெட்டாலும் எமக்கென்ன, எமது பைகள் நிரம்பட்டும் என்று இனத்தையே விற்று தாம் வாழ நினைக்கும் அத்தனை பேரும் கூட கடை விரித்திருக்கின்றார்கள். புதுப்புதுக் கடசிகள் புதுப்புதுக் கூட்டணிகள். தமிழ்ப் பகுதிகளுக்குப் புதிதான தென்னிலங்கை கட்சிகள் எல்லாம்கூட  தேர்தற் கடைத்தெருவில்முகாமிட்டுள்ளனர். மக்களுக்குத் தலையைச் சுற்றுகிறது. யாருக்கு வாக்களிப்பது ?

இந்தத் தேர்தலில் மக்கள் தமது உள்ளூராட்சி சபைக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இவற்றிற்கான பிரதிநிதிகள் 60 வீதம் தொகுதி அடிப்படையிலும் 40 வீதம் விகிதாச்சார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவர்.  தொகுதி அடிப்படையில் தாங்கள் தோற்றாலும் அந்த விகிதாச்சார பிரதிநிதித்துவம் மூலம் ஒன்றிரண்டு இடங்களையாவது பிடித்துவிடலாம் என்பதற்காகவே அனைத்துக் கட்சிகளும் அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறார்கள்.

இது வெறும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்தானா? ஆம், ஆனால் இதில் இரண்டு விடயங்களைகளைக் கவனிக்க வேண்டும்.ஒன்று, புதிய அரசியல் திட்ட இடைக்கால அறிக்கையின்படி அத்திட்டம் நிறைவேறினால், இந்தச் சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களைக் கொடுத்து மின்சாரம் வழங்கல், நீர் வழங்கல், முன்பள்ளி நிர்வாகம், சமூக சேவைகள் என்று பல விடயங்களையும் கையாளக்கூடிய அதிகாரம் கிடைக்கும்.    இரண்டாவது அனைத்து மக்களும் இந்தத் தேர்தலில் கட்சி அடிப்பபிடையில் வாக்களிக்கவுள்ளதால் மக்களிடையே தத்தமது கட்சிக்கு உள்ள செல்வாக்கைக் கணக்கெடுக்கலாம் என்பதும் இந்தக்கட்சிகளின் நோக்கமாகும்.

இன்றய நல்லாட்சி அரசின் பலமும், அரசுடன் பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமும் திடமாக இருக்குமாயின் பாதி வழிக்கு வந்திருக்கும் புதிய அரசியல் யாப்பு  நிச்சயம் முழுமை பெற்றுவிடும்.அதனூடாக தமிழ் மக்கள் சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பிலான அரசியல், நிர்வாக உரிமைகளைப்பெற்று வாழ முடியும். அந்தப் புதிய அரசியல் அமைப்பு வருமாயின் மக்களை ஏமாற்றிப் பிரச்சனைகளைத் தீர்க்காமல் தக்கவைத்துக் கொள்வதன் மூலம் தமது வயிற்றுப் பிழைப்பை, ஆதிக்கத்தை, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாமே என்பதற்காக அந்த அரசமைப்பை எப்படியும் வராமற் பண்ணிவிடவேண்டுமென்று சிலர் துடியாகத் துடிக்கிறார்கள்.பிச்சைக் காரனுக்கு புண்கள் மாறிவிடக்கூடாதல்லவா.?. பிரச்சனைகள் இருக்கும்வரைதான் அவற்றைச் சொல்லிச் சொல்லியே இவர்கள் பிழைக்கலாம். ஆயினும் மக்கள் அவ்வளவு முட்டாள்கள் இல்லை என்பதைப் பல முறை நிரூபித்துள்ளார்கள். இம்முறையும் நிச்சயம் அதை நிரூபிப்பார்கள்.

நல்லாட்சி அரசில் இருக்கும் ரணில் கட்சியும் மைத்திரி கட்சியும் எதிர்த்துப் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கவலைக்குரியதுதான். இருப்பினும் அது இந்தத் தேர்தல் முடியும் வரைதான். அதன்பிறகு அவர்கள் ஒற்றுமையாக நல்லாட்சியைத் தொடரத்தான் போகின்றார்கள். அவர்கள் இருவரையும் எதிர்க்கும் மகிந்தவின் கூட்டுக்கட்சி கணிசமான அளவில் தோற்கடிக்கப் படுமானால் இலங்கை மக்கள், தமிழர், சிங்களவர் அனைவருமே சிறந்த எதிர்காலத்தை அனுபவிக்கலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எவ்வளவுக்கு வலிமை பெறுகிறதோ அவ்வளவுக்குதான் அவர்களின் பேரம் பேசும் சக்தியும் அதிகரிக்கும். தமிழருக்கு அதிக நன்மையையான விடயங்களை உட்புகுத்தலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வர்களுக்குத்தானே இடம் கொடுக்கலாம். அதில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காகவே பலரும் புதுப்புதுக் கட்சிகளை உருவாக்கி தாமும் ஏமாந்து மக்களையும் ஏமாற்றுகிறார்கள். வெளிநாட்டுப் பணபலம் படைத்த சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே அழித்துவிட்டால் எதிர்ப்பே இல்லாமல் தமது ஏகபோக சர்வாதிகார ஆட்சி மூலம் தமது நலன்களைத் தக்கவைக்கலாம் என்பதற்காகவே கூட்டமைப்பை மூர்க்கமாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மலையளவு நன்மை செய்தாலும் அவற்றை முழுமையாக இருட்டடிப்புச் செய்துவிட்டு ஏதாவது எங்கேயாவது பிழை காணவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வெறும் பொய்களையும் புளுகுகளையும் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

2015ம் ஆண்டு வரை இருந்த மகிந்த ஆட்சிக்கும் தற்போதைய நிலைமைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அதை அனுபவிக்கும் மக்களுக்கு யாரும் சொல்லத் தேவையில்லை. அந்த நிலைமையை வித்தியாசத்தை ஏற்படுத்தியவர்கள் யார்? பாதி வழிக்குக் கொண்டுவந்த அந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மீதி பாதியையும் கொண்டுவர சந்தர்ப்பம் கொடுக்க வேண்டாமா? ஒவ்வொரு வட்டாரத்திலும் மிகப்பலரை போட்டியிட வைப்பதன் மூலம் அந்த வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தமது குடும்பத்தவர் நண்பர்கள் என்று வாக்குகளைச் சிதறடிப்பதன் மூலம் பிரதான மிகப் பலமான கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விகிதாச்சார ஆசனங்களை குறைக்கின்றார்கள்.

இதைச் சரியாக விளங்கிக்கொள்ளாத பலர் புதுப் புதுக் கட்சிகளும் கூட்டணிகளும் கொடுக்கும் சலுகைகளுக்காக முழு இனத்தினதும் எதிர்காலம் மீளமுடியாதவாறு பாழாய்ப் போவதை ஏன் உணராமற் செயற்படுகிறார்கள் என்று தெரியவில்லை. தென்னிலங்கையின் இரு பிரதானமான கட்சிகளும் சர்வதேச அனுசரணையோடு ஒன்றிணைந்து ஆட்சியில் இருக்கும் இப்படியொரு சந்தர்ப்பம் இதுவரை வந்ததும் இல்லை, இனி வரப்போவதும் இல்லை. மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபி) புதிய அரசியல் அமைப்பை விரும்புகின்றது. முழுமையான சர்வதேசத்தின் பின்னணியில் இடம்பெறும் இந்தப் புதிய அரசமைப்புத் திட்டம் அரசின் தவறால் அல்லது பின்னடிப்பால் வராமற் போனாலும் கூட எமது அடுத்தகட்ட  நகர்வுகளுக்கு சர்வதேசம் எம்பக்கத்தில் நிற்கவேண்டும். 

இலங்கையில் எப்படியாவது சமாதானம் ஏற்படவேண்டு மென்றுதான் இந்தியாவும் பெரிதும் செயற்படுகின்றது. எமக்கிருக்கும் ஒரேபலம் இந்தியா மற்றும் சர்வதேசங்களின் உதவி, பலம் தான். அதை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அவர்களை எதிரிகளாக்கக் கூடாது. அவர்களை எதிரியாக்கியதால் ஏற்பட்ட முள்ளிவாய்க்கால்  அவலம்  இன்னொருமுறை  வரவே கூடாது. இவற்றை  யெல்லாம் நன்கு விளங்கிக்கொண்டும் தமது சுய நலனுக்காக மக்களை பணயம் வைத்து சிலர் சூதாடுகின்றார்கள். மக்கள் ஏமாளிகளா? இந்த எதிரிகளுக்குக் கிடைக்கும் தற்காலிகமான பணஉதவியோ பிரபலமோ சலுகைகளோ மக்களின- தமிழ் இனத்தின் எதிர்காலத்தை விட உயர்ந்ததா? மக்களே சிந்தியுங்கள்.

இடைக்கால அரசியல் அமைப்பு அறிக்கையை பொதுமக்கள் நிச்சயம் தாமாக வாசித்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அதில் இருக்கும் அனைத்தையும் மறைத்துவிட்டு அதில் இல்லாதவற்றை இருப்பதாக பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். இடைக்கால அரசியல் அமைப்பு அறிக்கையில் சமஷ்டி என்ற சொல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமஷ்டி கட்டமைப்பு இருக்கிறது தானே. சமஷ்டி இல்லை என்று எங்கும் சொல்லவில்லை. ஆனால் ஒற்றை ஆட்சி இல்லை, அது இலங்கைக்குப் பொருந்தாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஏக்கிய ராஜ்ய என்றால் பிரிக்க முடியாத நாடு என்பதுதான் பொருள். அது நாட்டின் தன்மை பற்றிய சொல், அரசமைப்பைப் பற்றியது அல்ல. அதை அறிக்கையிலேயே எழுத்தில் போட்டுள்ள பின்பும் சில தமிழ்ப் புலவர்கள் அந்தச் சிங்களச் சொல்லுக்கு தமது சொந்த  வியாக்கியானத்தைக் கொடுத்து ஏன்தான் மக்களைக் குழப்பவேண்டும்.

மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரம் மற்றும் பொதுசேவை,(பகிரங்க சேவை) அதிகாரங்கள் இருக்கிறது தானே. ஆளுநர் தலையிட முடியாதவாறு சட்டம் இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் சுயாதீனமாக அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரம் உள்ளதுதானே. வடக்கு கிழக்கு இணைப்பு, கிழக்கு மாகாண மக்களின் சம்மதத்தோடு செய்ய வேண்டி இருப்பதால் அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் அதை எதிர்காலத்தில் சாத்தியமாக்கும் வகையில் சரத்துகள் உள்ளடக்கப்படவுள்ளன. சிங்களமும் தமிழும் சம அந்தஸ்த்து உள்ள இலங்கையின் அரசகரும மொழிகளாகும். தேசிய கீதம் இரு மொழிகளிலும் பாடப்படும். அத்தோடு வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை உறுதிப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் ஆட்சி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் தமிழ் மொழிதான் இருக்கும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

மாகாணங்களுக்குக் கொடுத்த அதிகாரங்களை குறைக்கவோ மீளப்பெறவோ மாற்றவோ முடியாதவாறு பொறிமுறைகள் உள்ளடக்கப் பட்டுள்ளன. அவற்றிற்கு உரிய ஒரு பாதுகாப்பாகவே மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்சபையும் உருவாக்கப்படுகின்றது. அனைத்து மதங்களையும் சம மரியாதையுடனும் மாண்புடனும் பாரபட்சமின்றியும் நடத்தவேண்டும் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டாலும் பெளத்ததிற்கு முதன்மைத் தானம் வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாதுதான். ஏற்கெனவே நீண்ட காலமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஒரு விடயத்தை மாற்றினால் பெளத்த சிங்கள மக்களை, துறவிகளை சம்மதிக்க வைக்க முடியாத ஒருநிலை இருப்பது யதார்த்தம். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய அரசமைப்பு சர்வசன வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டுமல்லவா? அந்த ஒரு விடயத்திற்காக மீதி அனைத்தையும் இழந்துவிட வேண்டுமா? என்பதே நமக்குள்ள கேள்வியாகும். அதனால் மீதி அனைத்தும் கிடைக்குமானால் இதைப் பரிசீலிக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. ஆனால் எப்படியும் தமிழ் மக்கள் பிரச்சனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தீர்க்கப்பட்டால் தமது எதிர்கால செயற்பாடுகள் கெட்டுவிடுமே என்பதனால் அதில் ஒன்றுமேயில்லை என்று சிலர் ஒப்பாரி வைக்கிறார்கள். மக்களே கவனம். கடந்த காலங்களில் நீங்கள் காட்டிய விவேகம் நிதானம் நிச்சயம் இம்முறையும் நிரூபிப்பீர்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

வீட்டுச் சின்னத்தையே உங்கள் இதயசின்னமாக நம்புங்கள். தவறாது வாக்களியுங்கள். கடமை தவறாது சிரமம் பாராது மாசி (பெப்ரவரி) மாதம் 10ம் திகதி வரலாறு படைப்போம். தமிழர் வெறும் உணர்ச்சி வசப்பட்டவர்கள் அல்ல, திறமையான சிந்தனையாளர் என்பதை நிரூபிப்போம்.

தமிழரின் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தமிழரின் ஏகபோகக் கட்சியாக நிலைநிறுத்துவோம். வஞ்சகர்கள் ஒதுங்கட்டும். இனியாவது ஈழத்தமிழர் இலங்கையில் நிம்மதியாக உரிமைகளோடு நல்வாழ்வு வாழ்வோம்.

V .வின். மகாலிங்கம்.