Feb 08

அழகிப் போட்டி: பெண்ணாக நடித்த ஆண்! இறுதி வரை தேர்வான சுவராஸ்யம்!

கஜகஸ்தான் அழகிப் போட்டியில்  இறுதிச் சுற்று வரை முன்னேறிய ஒரு பெண் , உண்மையில் ஓர் ஆண் என்ற விஷயம் அம்பலமான போது ஏற்பாட்டாளர்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

கஜகஸ்தானில் 4,000 போட்டியாளர்கள் பங்குபெற்ற 'மிஸ் நிதர்சன  அழகி' போட்டியில் அலினா அலிவா என்ற பெயரில் ஆண் நபர் ஒருவர் பங்குபெற்றது தெரியவந்துள்ளது.அத்தனை போட்டியாளர்களையும் தோற்கடித்து இறுதிச் சுற்று வரை முன்னேறிய அந்த நபரின் பெயர் இல்லாய் டியாக்கிலேவ் (வயது 22) என்பதாகும்.

இவர் தன் நண்பர்களுடன் விடுத்த சவாலின் காரணமாக பெண் வேடமிட்டு போட்டியில் கலந்து கொண்டதாகவும் இறுதிச் சுற்றுவரை முன்னேறுவேன் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இறுதிச் சுற்றுக்கான தேர்வின் போது தானாக முன்வந்து நடுவர்களிடம் நடந்தவற்றைக் கூறிய அந்த நபர் அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.

இது குறித்து தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்த நடுவர்கள், உடனடியாக குறித்த நபரை நீக்கிவிட்டு அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அக்கெரிம் டெமிர்கனோவ (வயது 18) என்னும் பெண்ணுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளனர்.