May 15

ஜாதவ் விவகாரத்தில் வியன்னா ஒப்பந்தம் மீறும் பாகிஸ்தான்

உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு, பாகிஸ்தானால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் விவகாரம் தொடர்பாக நெதர்லாந்தில் தி ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டில் இன்று விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் இந்தியா சார்பில் பிரப வக்கீல் ஹாரீஸ் சால்வே ஆஜராகி வாதாடி வருகிறார்.

மனித உரிமை மீறல்

இவரது வாதுரையில்: குல்பூஷன் ஜாதவ் ஈரானில் இருந்து கடத்தப்பட்டார். அவரது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கவில்லை. அவரது வாக்குமூலம் வலுக்கட்டாயமாக தவறுதலாக பெறப்பட்டது. ஆதாரங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. 

ஜாதவின் பெற்றோரின் விசா விண்ணப்பம் இன்று வரை நிலுவையில் தான் இருந்து வருகிறது. குற்றச்சாட்டு தொடர்பான எந்தவொரு ஆவணத்தையும் பாகிஸ்தான் தரவில்லை. சட்டப்பூர்வமான நடவடிக்கை மூலம் போராட இந்தியா விரும்புகிறது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள மரணத்தண்டனை கொடூரமானது. 

மனித உரிமை மீறல் நடந்துள்ளது. பாகிஸ்தான் வியன்னா ஒப்பந்தத்தை மீறி வருகிறது. நீதி சிதைக்கப்பட்டுள்ளது. தண்டனை ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். இவ்வாறு வாதாடி வருகிறார்.

சமீபத்தில் ஜாதவ் மீதான தூக்கு தண்டனையை நிறைவேற்ற சர்வதேச கோர்ட் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.