May 15

கிரேக்கத்தின் வடக்கில் ரயில் தடம்புரண்டதில் மூவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்

வடக்கு கிரேக்கத்தில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதேன்ஸிலிருந்து தெசலோனிக்கிக்கு புறப்பட்ட ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

காயமடைந்த 10 பேரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட வேளையில், குறித்த ரயிலில் சுமார் 70 பயணிகள் மற்றும் 5 ரயில் பணியாளர்கள் இருந்ததாகவும்  விபத்துக்குள்ளான இரண்டு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த வீடுகளின் சுவரில் மோதியதாகவும்   தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்னவென்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.