May 15

கச்சா எண்ணெய் சந்தையில் சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியில் சவூதி – ரஷ்யா தீவிரம்

உலக கச்சா எண்ணெய் சந்தையில் சமநிலையை ஏற்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை  கச்சா எண்ணெய் வெளியீட்டில் குறைப்புக்களை ஏற்படுத்த சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தீர்மானித்துள்ளன.

மேற்குறித்த அறிவித்தலை ரஷ்யா மற்றும் சவூதி அரேபியாவின் எரிசக்தி தொடர்பான அமைச்சர்கள் உத்தியோகபூர்வமாக இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளனர்.

பீஜிங்கில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சர் அலெக்ஸான்டர் நோவாக்குடன் (Alexander Novak) கலந்துகொண்டு உரையாற்றிய சவூதி எரிசக்தி அமைச்சர் காலிட் அல் – ஃபலீ (Khalid al-Falih), “கச்சா எண்ணெய் தொடர்பில் நடைமுறையில் உள்ள குறைப்புக்கள் போலவே அடுத்தகட்ட குறைப்புக்களும் அமையும்” என தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவித்தலைத் தொடர்ந்து ஆசிய வர்த்தகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சுமார் 1.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒபெக் (OPEC) நாடுகள் மற்றும ஒபெக் அமைப்பில் இல்லாத நாடான ரஷ்யா ஆகியன முறையே பெற்றோலியம் மற்றும் ஏனைய உற்பத்திகளை நாளொன்றுக்கு சுமார் 1.8 மில்லியன் பீப்பாய்களாக குறைக்கத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.