Feb 05

ஆடு வளர்க்கலாம்.., கோழி வளர்க்கலாம்.., அசுரத்தனமா வீட்டுலே முதலை வளர்க்கலாமா?

மனிதர்கள் வீட்டில் ஆடு வளர்த்தார்கள், மாடு வளர்த்தார்கள், நாய் வளர்த்தார்கள் என்ற காலமெல்லாம் போய், 200 கிலோ எடையில் அசுரத்தனமான முதலை வளர்த்து வருகிறார் இந்தோனிசியாவைச்  சேர்ந்த  ஒருவர்.

அந்த வீட்டில் இந்த முதலை தான் செல்லப் பிராணி. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 15 கிலோ மீன்கள் இதற்கு உணவாகத் தரப்படுகிறது. மேற்கு ஜாவாவிலுள்ள செம்பூர் என்ற இடத்தில்  முகம்மது இவான் என்ற அவர், கடந்த 21 ஆண்டுகளாக இந்த முதலையை வீட்டில் வளர்த்து வருகிறார். "கடந்த 1997 ஆம் ஆண்டில் மீனவர் ஒருவரின் வலையில் குட்டியாக இருந்த இந்த முதலை சிக்கியது.  அதைப் பார்த்ததும் எனக்குப் பிடித்து விட்டது கொஞ்சம் காசு கொடுத்து அந்த மீனவரிடமிருந்து அதை நான் வாங்கினேன்" என்கிறார் முகம்மது இவான்.

''அதனை வீட்டிற்குக் கொண்டு வந்த போது வீட்டிலுள்ளவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். இருந்தாலும் முதலையை எனக்குப் பிடித்திருந்ததால் அதற்கு 'கோஜேக்' எனப் பெயர் வைத்து வளர்க்கத் தொடங்கினேன். அதுக்கென வீட்டின் வாசல் பகுதியில் ஒரு பெரிய தொட்டியை உருவாக்கினேன்'' என்றார் அவர்.

முதலைகள் பற்றி எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. பின்னர் முதலைகள் பற்றி அறிந்தவர்களிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். கொஞ்சம்  கொஞ்சமாக முதலையின் இயல்பு பற்றி அனுபவப் பூர்வமாக பல அம்சங்களைக் கற்றுக்கொண்டேன்'' என்று முகம்மது இவான் சொன்னார்.

''என் பிள்ளைகள் இந்த முதஐயின் அருகில்தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  கோஜேக் சாதுவாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கும்.  வாரம் ஒருமுறை கோஜேக்கை குளிப்பாட்டுவேன். பல் துலக்கி விடுவேன்'' என்றார் அவர்.

''என் கோஜேக்கை பார்க்க வெளிநாட்டினர் கூட என் வீட்டிற்கு வருவார்கள். இதைப் பல லட்சம் தந்து விலைக்கு வாங்கிக் கொள்ள பலர் முன்வந்தனர். ஆனால், என் பிள்ளை மாதிரி வளர்த்து விட்ட கோஜேக்கை பிரிய எனக்கு மனமில்லை எனவே மறுத்து விட்டேன்" என்கிறார் முகம்மது இவான்.