Feb 05

குறைந்த விலையில் சர்ஃபேஸ் லேப்டாப், சர்ஃபேஸ் புக் அறிமுகம்

மைக்ரோசாஃப்ட் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சர்ஃபேஸ் லேப்டாப் மற்றும் சர்ஃபேஸ் புக் 2 சாதனங்களின் குறைந்த விலை மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களை விட விலை குறைவு என்பதால் சிறப்பம்சங்களும் குறைக்கப்பட்டுள்ளது. 

விலை குறைந்த மைக்ரோசாஃப்ட் சாதனங்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகமான மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 999 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய விலை குறைந்த லேப்டாப் விலை 799 டாலர்கள் என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய விலை குறைந்த மாடலில் இன்டெல் கோர் M3 பிராசஸர், இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 615, 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய 999 டாலர் மாடலில் இன்டெல் கோர் i5 பிராசஸர், 4 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டது. 1599 டாலர் மாடலில் இன்டெல் கோர் i7 பிராசஸர் 8 ஜிபி / 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான சர்ஃபேஸ் புக் 2 விலை 1499 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாடலின் விலை 1199 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் வழங்கப்பட்ட அதே சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கு்ம நிலையில், புதிய மாடலின் மெமரி மட்டும் 128ஜிபி-யாக குறைக்கப்பட்டிருக்கிறது.

மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை இன்டெல் கோர் i5 பிராசஸர், 8 ஜிபி ரேம், இன்டெல் கிராஃபிக்ஸ் 620 வழங்கப்பட்டுள்ளது. சர்ஃபேஸ் புக் 2 லேப்டாப் இந்திய வெளியீட்டை மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சமீபத்தில் உறுதி செய்திருந்தார்.  அந்த வகையில் புதிய மைக்ரோசாஃப்ட் சாதனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. 

சர்ஃபேஸ் புக் 2 சாதனத்தை - லேப்டாப் மோட், டேப்லெட் மோட், ஸ்டூடியோ மோட் மற்றும் வியூ மோட் என நான்கு விதங்களில் பயன்படுத்த முடியும். இவை அனைத்திலும் மைக்ரோசாஃப்டின் பிக்சல்சென்ஸ் (PixelSense) டிஸ்ப்ளேக்களுடன் வருகிறது. 13.5 இன்ச் ஸ்கிரீன்களில் 3000x2000 ரெசல்யூஷன், 15 இன்ச் மாடலில் 3240x2160 ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. 

இவற்றில் இரண்டு யு.எஸ்.பி. 3.1 ஜென் 1 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோஜாக், 2 சர்ஃபேஸ் கனெக்ட் போர்ட் மற்றும் எஸ்.டி. கார்டு ரென்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் விண்டோஸ் ஹெல்லோ ஃபேஸ் ஆத்தென்டிகேஷன், 5 எம்பி செல்ஃபி கேமரா, 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் முன்பக்க டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.