May 15

பிராந்தியப் பெருந்தெரு தொடர்பாக விரைவில் முடிவெடுக்கவும் - பழங்குடி இனத் தலைவர்களை நிர்ப்பந்திக்கும் ஒன்ராரியோ முதல்வர்

ஒன்ராரியோவின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள பழங்குடி இனத்தவர் வாழும் பிரதேசத்திற்கான பெருந்தெரு நிர்மாணிப்புத்  தொடர்பாக விரைவாக முடிவொன்றை எடுக்குமாறு ஒன்ராரியோ முதல்வர் கத்லீன் வின் அவர்கள் பழங்குடி இனத் தலைவர்களை நிர்ப்பந்தித்துள்ளார்.

இப்பிராந்தியப் பெருந்தெரு (Regional Road) நிர்மாணிக்கப்படுமிடத்து பழங்குடியினரின் பிரதேசத்தின் சுரங்கத்தொழிற்துறைக்கும் அது பயன்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பழங்குடி இனத் தலைவர்கள் கூட்டாக முடிவொன்றை எடுக்கத்தவறும் பட்சத்தில், இப்பெருந்தெரு நிர்மாணிப்பிற்கு ஆதரவளிக்கும் பழங்குடி இனச் சமூகங்களுடன் தான் ஒருதலைப்பட்சமாக பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒன்ராரியோவின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள பழங்குடி இனத்தவர் வாழும் பிரதேசத்திற்கான பெருந்தெரு நிர்மாணிப்பிற்காக $ 1 பில்லியன் வரைக்கும் செலவு செய்ய உள்ளதாக ஒன்ராரியோ அரசு 3 வருடங்களுக்கு முன்னர் அறிவித்தது.

அப்பிராந்தியங்களில் உள்ள பாரிய குரோமைற்று மற்றும் ஏனைய கனிமவளங்களை அபிவிருத்தி செய்யும்முகமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பிராந்தியங்களுக்கு மோட்டார் கார்களில் பயணம் செய்யமுடியாது என்பதனால் சகல காலநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய பிராந்தியப் பெருந்தெரு ஒன்றை நிர்மாணிக்க அரசு உத்தேசித்துள்ளது.