Jan 31

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்புக்கான தடை நீங்குமா?

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று, அயர்லாந்து. அங்கு பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு தற்போது இயலாது. அதற்கான தடைச்சட்டம் (அரசியல் சாசனத்தின் 8-வது சட்ட திருத்தம்) அங்கு அமலில் இருந்து வருகிறது. உயிருக்கு ஆபத்தான நேரங்களில் மட்டும் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

இந்த நிலையில் அரசியல் சாசன சட்ட திருத்தத்தை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதை ரத்து செய்துவிட்டால், கருக்கலைப்பு சட்டபூர்வமாகி விடும். இதற்காக அங்கு வருகிற மே மாதம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் லியோ வரத்கார் குறிப்பிடுகையில், “கருக்கலைப்பு தடையை நீக்கி சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்வேன்” என்று கூறினார். ஏற்கனவே 1983-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தித்தான் கருக்கலைப்புக்கு தடை விதித்து அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தரித்த 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி அளித்து, அதற்கான சட்ட வரைவினை சுகாதாரத்துறை மந்திரி தயார் செய்வார் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு அங்கு பல கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்ற குழுவும், குடிமக்கள் பேரவையும் கருக்கலைப்பு தடையை நீக்குவதற்கு பரிந்துரை செய்தது நினைவுகூரத்தக்கது.