Jan 30

பிரபாகரன் மீது கலர் பொடியை தூவிய மதிவதனி: சுவாரசிய காதல் கதை

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால், அவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது.

பிரபாகரனுக்கு 1984 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தமிழீழம் உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரனுக்கும், அவரது மனைவி மதிவதனிக்கும் போர்களத்தில் தான் காதல் மலர்ந்துள்ளது.

தனது, கணவனின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தார் மதிவதனி. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஜூலை படுகொலையை தொடர்ந்து தென் பகுதியில் உள்ள மக்கள் வடகிழக்கு நோக்கி குடிபெயர ஆரம்பித்தனர்.

இந்த இடம்பெயர்தலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் வகையில் மாற்றுச் சான்றிதழை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதனை அரசு ஏற்க மறுத்துதோடு மட்டுமல்லாமல் அனைவரும் அவரவர் பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், விடுதலைப்புலிகள் சார்பில் “கொலைகளத்துக்கு போக வேண்டாம்” என்று துண்டுபிரசுரம் வெளியானதால், போராட்டம் வெடிக்கும் எனக்கருதி யாழ்பாணம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.

இதனை கண்டித்து நான்கு மாணவிகள் உட்பட, 9 மாணவர்கள் 1984 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். அமைதியான முறையில் இவர்கள் நடத்திய போராட்டம், விடுதலைப்புலிகளால் முடிக்கப்பட்டது.

ஜனவரி 16ம் திகதி அன்று இரவு, ஒன்பது மாணவர்களும் படகு மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் மதிவதனி.

சென்னையில் தனது பெற்றோரை பிரிந்து இருந்த மதிவதனி மற்றும் பிற மாணவர்களுக்கு தேவையான உதவிகள் பிரபாகரனால் செய்துகொடுக்கப்பட்டன. இதற்கிடையில், இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது.

ஒரு முறை ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு மதிவதனி, பிரபாகரன் மீது கலர் பொடியை தூவியுள்ளார், இதனால் கோபம் கொண்ட பிரபாகரன் மதிவதனியை கடிந்து கொண்டார்.

இதனால், மதிவதனி அழுதுள்ளார், இதனையறிந்த பிரபாகரன் அவரை சமாதானப்படுத்தியுள்ளார். அதன் பின்னர், யாழ்ப்பாணத்தில் இருந்து மதிவதனியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு, இருவரின் சம்மதத்துடன் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

மதிவதனி தனது கணவரை நேசித்து போன்றது அவரது நோக்கத்தையும் நேசித்து அவருக்கு உதவியாக இருந்தார்.

இருவரின் காதலும் போராட்டத்துடன் இணைந்து நின்றது.