May 14

அன்று முதல் இன்று வரை சீனா பிரித்தானியாவின் நெருங்கிய நண்பனே: பிலிப் ஹமொன்ட்

பண்டைக் காலம் தொட்டு சீனாவுடன் பிரித்தானியா நல்லுறுவு கொண்டுள்ளது என பிரித்தானிய நிதி அமைச்சர் பிலிப் ஹமொன்ட் (Philip Hammond) தெரிவித்துள்ளார்.

சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமான ஒரே பிராந்தியம் ஒரே பாதை திட்டம் குறித்த பேரவையில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவது ஏனைய உலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தவே தவிர தனித்து செயற்பட அல்ல என தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர், சீனா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் பிரெக்சிற் நடவடிக்கையினால் பிரித்தானியா மற்றும் சீனாவுக்கு இடையில் உள்ள உறவில் விரிசல்கள் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, உலகமயமாதலின் ஒரு விளைவாக மக்களிடையே அமைதியின்மை மேலோங்கியுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக பிரித்தானியாவின் பிரெக்சிற் விவகாரம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நியமிக்கப்பட்டமை ஆகியவற்றினால் மக்கள் அமைதியிழந்துள்ளமையை குறிப்பிட முடியும்.