May 14

இணைய தாக்குதல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ரஷ்யா!

அதிர்ச்சியடைய வைத்துள்ள ரான்சம்வெயார் என அழைக்கப்படும் இணைய தாக்குதல் விவகாரம் குறித்து, பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ரஷ்யா புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் சுமார் 99 நாடுகளின் 75,000 கணனிகளில் நடத்தப்பட்ட இணைய தாக்குதலில் ரஷ்யாவின் உள்நாட்டு வங்கிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல்களினால் பல்லாயிரம் கணனிகள் பாதிப்படைந்துள்ளதாகவும், ரஷ்ய பொதுத்துறை நிறுவனமான ரஷ்ய புகையிரத போக்குவரத்து கழகமும் இதே போன்றதொரு சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், ஆனால் அத்தாக்குதல்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டன என்றும் மத்திய வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க உளவு அமைப்பின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஹேக்கிங் டூல்கள் மூலம் குறித்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ள போதும் இது குறித்து முழுமையாக ஆராய யூரோபோல் அமைப்பு கடுமையாக போராடி வருகின்றது.