Jan 30

கனடியத் தமிழர் பேரவையின் தைப்பொங்கல் இரா விருந்து!

கனடியத் தமிழர் பேரவையின் பதினோராவது  தைப்பொங்கல் இரா விருந்து வெகு சிறப்பாக 20.01.2018 சனிக்கிழமையன்று மாலை மார்க்கம் 'ஹில்ரன் ஹொட்டல்' மண்டபத்தில் நடைபெற்றது.   இவ்விழாவில் ஏறத்தாழ ஆயிரம் பேர்வரையில் கலந்துகொண்டனர். ஒன்ராறியோ மாகாண முதல்வர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, மாகாண சபை, நகரசபை உறுப்பினர்கள், அரச ஊழியர்கள், காவற்றுறை அதிகாரிகள் எனப் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

கனடியத் தமிழர் பேரவையின் இரா விருந்து நிகழ்ச்சியானது தமிழர் பாரம்பரிய மங்கள இசையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், கனடாப் பண், தமிழ்த்தாய் வாழ்த்து, அமைதி வணக்கம் ஆகியன இடம்பெற்றன.  இவற்றைத் தொடர்ந்து, நியூபவுண்லாந்துக் கடலில் உயிருக்காகப் போராடிய 155 தமிழ் ஏதிலிகளை மீட்டெடுத்த ’கப்டன் ஹஸ் டல்ரன்’ அவர்களுக்கான அஞ்சலி உரையை கனடியப் நாடாளுமன்ற உறுப்பினரான 'ஹரி ஆனந்தசங்கரியின்' துணைவியாரான சட்டத்தரணி 'ஹரிணி சிவலிங்கம்'  ஆற்றினார். கனடியத் தமிழர் பேரவையின் தலைவர்  'Dr. சாந்தகுமாரின்'தலைமையுரையைத் தொடர்ந்து கனடியப் பிரதமரின் வாழ்த்துச் செய்தியை கனடிய மத்திய அரச அமைச்சர் 'மரியம் மொன்செவ்' வழங்கினார். 

இவ்விழாவில், அமெரிக்க ஹாவார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான நிதியை திரட்டுவதில் முன்னின்று உழைத்த 'Dr.விஜய் ஜானகிராமன்', 'Dr.சுந்தரேசன் சம்மந்தன்' ஆகியோருக்கு மாற்றத்திற்கான முன்னோடிகள் விருது வழங்கப்பட்டது. ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சி,புலமைப்பரிசிலுக்கான நிதியத்தை நிறுவ இரண்டு மில்லியன் கனடிய டாலர்கள் உவந்தளித்த கனடியத் தமிழ்ப் புரவலர் 'இரவி குகதாசன்' அவர்களுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. அத்தோடு, கனடியத் தமிழர் பேரவையின் வேண்டுகோளை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைய உள்ள விவசாயப் பண்ணைக்காக ஒரு  இலட்சம் கனடிய டாலர்களை நன்கொடையாக வழங்கிய கனடியத் தமிழ் புரவலர் 'கைலராஜா' அவர்களுக்கும் மதிப்பளிக்கப்பட்டது.

ஒன்ராரியோ மாகாண முதல்வர் 'கத்தலின் வின்' தனது வாழ்த்துரையின் போது கனடியத் தமிழ் மக்களில் பெரும்பாலோனோர் ஒன்ராரியோ மாகாணத்தில் வசிப்பதாகவும் அவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் அதிக வினைத்திறன் உடையோராகவும் இருப்பதாகக் குறிப்பிட்டு கனடியத் தமிழ் மக்களைப் பாராட்டினார். அத்துடன் ஒன்ராரியோ மாகாணத்தின் வளர்ச்சியில் பங்குகொண்டு இந்த மாகாணத்தின் பிரிக்க முடியாத சக்திகளாக ஒன்றித்துள்ளார்கள் என்று பெருமிதம் பொங்கத் தெரிவித்தார். 

பொங்கல் விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் 'சுமந்திரன்' அவர்கள் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு இலங்கைத் தமிழ் மக்கள் ஆற்றிய அதியுச்ச பங்களிப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த மாற்றத்தின் விளைவாக இன்று இலங்கைத் தமிழ் மக்களது வாழ்வியலில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ஆனாலும் நாம் விரும்புகின்ற மாற்றத்தை முழுமையாக ஏற்படுத்த நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் கூறினார். இந்தப் பயணத்தை நாம் நம்பிக்கையுடன் மேலும் தொடர்கிறோம் என்பதையும் குறிப்பிட்டார்.

ஒன்ராரியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் 'பற்றிக் பிறவுண்', ரொறொன்ரோ மேயர் 'ஜோன் ரொறி', மார்க்கம் மேயர் 'பிராங் ஸ்காப்பற்றி', பிக்கறிங் மேயர்'டேவிட் றயன்', ஸ்ரோவில் நகர மேயர் 'யஸ்ரின் ஓல்ற்மான்', ஆகியோரும் வாழ்த்துரைகளை வழங்கினார்கள். 

இந்த பொங்கல் விழாவிலே பிரபல கனடியத் தமிழ் நடன ஆசிரியைகளான 'நிரோதினி பரராஜசிங்கம்', 'ரேணுகா விக்னேஸ்வரன்' ஆகியோரது மாணவர்களின்நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பெண்கள் கல்வியின்  முக்கியத்துவம் குறித்த கலைத்துவத்துடனான உரையாடலை கனடியத் தமிழர் பேரவையின் எண்ணத்தில் உருவான தலைமைத்துவம் மற்றும் புதுச்சிந்தனைக்கான மையத்தின் (CFLI) மாணவர்கள் வழங்கினார்கள்.  

விழாவின் இறுதியில், கனடியத் தமிழர் பேரவையின் பொருளாளர்  வழங்கிய நன்றியுரையைத் தொடர்ந்து நல்வாய்ப்புச் சீட்டிழுப்புடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.