May 14

என் மகனுக்காக 25 வருஷமா அதைப் பாதுகாக்கிறேன்! அற்புதம்மாள் நெகிழ்ச்சி

விசாரிச்சிட்டு அனுப்பிடுறேன்மா’னு சொல்லி என் மகனை அழைச்சிட்டு போய் 26 வருஷமாகப் போவுது. இன்னும் எம்புள்ளையை விட மாட்டேங்குறாங்க- துயரம் ததும்பும் குரலில் தொடங்குகிறார் அற்புதம்மாள்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை தன் மகன் பேரறிவாளனுக்கு விடுதலை பெற்றுத்தர போராடி வருபவர்.

திராவிட இயக்கப் பின்புலத்திலிருந்து வந்த அற்புதம்மாளின் உறுதியும் போராட்டத் திறனும் பலருக்கும் பாடம்.

உண்மையின் கரம்பிடித்து, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் அற்புதம்மாளிடம் பேசினோம்.

அன்னைக்கு எம் பையன் அறிவைத் தேடிட்டு போலீஸ் வந்ததும், நானே அவனை ஒப்படைச்சேன். அவன் எந்தத் தப்பும் செஞ்சிருக்க மாட்டான்ங்கிற நம்பிக்கைதான் அதுக்குக் காரணம்.

விசாரிச்சிட்டு அனுப்பிடுறோம்’னு அழைச்சிட்டுப் போனாங்க. அடுத்த நாள் ‘மல்லிகை’ ஆபீஸ்ல போய் கேட்டா, ‘உன் பையன் பொய் சொல்றாம்மா’னாங்க. ‘எம் பையன் தப்பும் பண்ணியிருக்க மாட்டான், பொய்யும் சொல்ல மாட்டான்’னு சொல்லி, அவனைப் பார்க்கணும்னு கேட்டேன். ஆனா அறிவைப் பார்க்க விடல.

அடுத்த நாள் பேப்பரைப் பார்த்தா, அவங்களே தேடி கண்டுபிடிச்சு கைது செய்த மாதிரி நியூஸ் போட்டிருந்தாங்க. எனக்கு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் இதைப் பத்தியெல்லாம் அப்ப எதுவும் தெரியாது. என்ன செய்யறதுன்னே புரியல.

ஒரு மாசமா என் பையன் முகத்தைப் பார்க்க முடியல. இடையில செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைச்சிட்டு வந்ததைக்கூட பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.


அப்புறம் ஸ்பெஷல் கோர்ட் அமைச்சாங்க. அப்ப அறிவைப் பார்க்கப் போனேன். ஏகப்பட்ட கெடுபிடிகளுக்குப் பிறகு அனுமதி கிடைச்சுது. அவன்கிட்ட பேசறதுக்கு முன்னாடி அழுகைதான் வந்துச்சு.

ஒண்ணுமில்லம்மா… நீங்க கிளம்புங்க… கிளம்புங்க’ன்னே சொல்லிட்டு இருந்தான். அவன் கையைப் பிடிச்சப்போ, அவ்வளவு நடுங்கினுச்சு. எங்க பக்கத்திலேயே போலீஸ்காரங்க நின்னுட்டு இருந்தாங்க. எங்களையும் விசாரிச்சாங்க.

ரொம்ப நாள் கழிச்சித்தான் தெரிஞ்சது, பல கொடுமையான விசாரணைகளை அனுபவிச்சிட்டு என் புள்ள அந்த ஸ்பெஷல் கோர்ட்டுல உட்கார்த்திருந்தான்னு. அதனாலதான் அவன் கையில அவ்வளவு நடுக்கம்.

என்னைக் கிளம்பச் சொல்லிட்டே இருந்தது, அது எனக்குத் தெரிஞ்சிடக்கூடாதுனு அவன் பதறினதுதான் காரணம்” – குரல் உடைந்து ஓரிரு நிமிடங்கள் மெளனமானார்.

அறிவு சிறைக்குப் போன சமயம், அவன் அக்காவுக்கு கல்யாண ஏற்பாடு செஞ்சிட்டு இருந்தோம். இந்தப் பிரச்னையெல்லாம் வந்ததும் என் பொண்ணு, ‘தம்பி வந்தப்பறம்தான் கல்யாணம் செஞ்சிப்பேன்’னு சொன்னா. அறிவுதான் அவளைச் சமாதானப்படுத்தி, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சான்.

அக்கா கல்யாணத்தை போட்டோ எடுங்க, வீடியோ எடுங்க… நான் வந்து பார்த்துக்குறேன்’னு ஆசையாகக் கேட்டான். அப்பவெல்லாம் வீடியோ எடுக்கிறது பெரிய விஷயம். ஆனா, அறிவுக்காக வீடியோ எடுத்து வெச்சோம்.

பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க. ஆனா என் புள்ளையால வர முடியலையேங்கிற நெனப்புதான் எனக்கு மனசு முழுக்கக் கிடந்துச்சு.

எனக்கே அப்படின்னா, தம்பி மேல உயிரையே வைச்சிட்டு, மண மேடையில் உட்கார்ந்திருந்த என் பொண்ணோட மனசு என்ன நினைச்சிருக்கும்னு யோசிக்கவே முடியல.கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது.

அறிவு சொன்னது மாதிரியே வீடியோவும் எடுத்தாச்சு. அதுக்கப்பறம் அவன் தங்கச்சிக்கும் கல்யாணம் நடந்து, அதையும் வீடியோ எடுத்து வைச்சிருக்கேன். ஆனா, இந்த நாள் வரைக்கும் அந்த வீடியோ கேசட்கள் அவன் பார்க்காமலேயேதான் கிடக்குது.

இன்னைக்கு வந்துடுவான், நாளைக்கு வந்துடுவான்னு அதைப் பத்திரமா வைச்சிருக்கேன். 25 வருஷமாச்சு. என்னைக்கு வந்து பார்க்கப் போறானோ” – பெருமூச்சொன்றை விட்டுத் தொடர்ந்தார்.

நாங்க திராவிட இயக்கக் குடும்பம்ங்கிறதால தீபாவளி எல்லாம் கொண்டாடுறது இல்ல. பொங்கல்தான் எங்களுக்குப் பண்டிகை. ஒவ்வொரு வருஷமும் அறிவு இல்லாம பொங்கலைக் கொண்டாட மனசே இல்ல.

அவன் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்ல. கம்பீரமா இருந்த மனுஷன், இப்ப குச்சி வைச்சிட்டு நடக்குற அளவுக்கு வந்துட்டாரு. அவரைப் பார்க்கவாவது அனுமதிங்கனு பரோல் கேட்டு வருஷமாச்சு… கிடைக்கலப்பா.

நான் கேட்கிறது சட்டப்படியான பரோல்தான். அதையே இழுத்தடிக்கிறாங்க. இந்த வழக்குல அறிவு உள்பட பலரும் குற்றவாளிகள் இல்லன்னு பல பேரு சொல்லிட்டாங்க. வழக்கை விசாரிச்ச அதிகாரிகளும் தங்களோட கருத்தை மாத்திக்கிட்டதைப் பார்த்தோம்.

இல்லாருக்கு இவ்வுலகம் இல்லைனு சொல்வாங்களே, அதுபோல ஆயிடுச்சு. நீதிகூட இருக்கிறவங்க ஒண்ணாவும், இல்லாதவங்களுக்கு ஒண்ணாவும் கிடைக்குது.

இதேபோல வழக்குல கைதான சஞ்சய் தத்துக்கு ஈஸியா எல்லாமே முடிஞ்சுபோகுது. ஆனா, அறிவுக்கு சட்டரீதியா கிடைக்க வேண்டிய விடுதலை, போராடியும் கிடைக்கல.

நீதியரசர் கிருஷ்ணய்யரை முதல் தடவையாகப் பார்க்க போனப்ப அவர் சொன்னது, ‘உன் பையன் நிச்சயம் விடுதலையாவான்’ என்பதுதான்.

அவரைப் போல சட்டம் தெரிஞ்சவங்க எல்லாம், எந்தக் குற்றமாக இருந்தாலும் 16 வருஷங்களுக்கு மேல சிறையில அடைக்கக்கூடாதுனு சொல்றாங்க.

ஆனா, எம் பையனை 19 வயசுல சிறையில அடைச்சாங்க. இப்ப 45 வயசாகுது.பேரறிவாளன்உங்ககூட பேசிட்டு இருக்கிற இந்த நிமிஷம்கூட சிறையில எம் மகன் உடம்பு சரியில்லாம கஷ்டப்படுறான்.

சிகிச்சைக்கு சென்னை மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போகணும்னு டாக்டருங்க சொல்லியும் கொண்டு வர மாட்டேங்கிறாங்க.

ஒருவேளை அறிவை சிறையிலேயே கொன்னுட்டா இந்த கேஸை ஈஸியா முடிச்சிடலாம்னு நினைக்கிறாங்களோ என்னவோ” – அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் கண் கலங்குகிறார்.

அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பலரும் எம் பையன் விடுதலைக்காகப் போராடுறாங்க. தொடர்ச்சியா குரல் கொடுத்தாதான் அது நடக்கும்.

எல்லோரும் அழுத்தம் கொடுக்கும்போது நிரபராதியான எம் பையன் வெளியே வருவான். எங்களோட வயசான காலத்துல துணையா இருப்பான். இதெல்லாம் நடக்கும்னு நான் முழுசா நம்பறேன்ம்பா!” என்றபோது அந்தத் தாயின் கண்களில் கனன்றது, வலியால் திரண்டிருந்த உறுதி.

தன் மகனுக்காகப் போராட்டத்தையே வாழ்வாக்கிக்கொண்ட அற்புதம்மாளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.