May 14

சசி, பன்னீருக்கு போட்டியாக அ.தி.மு.க., - தீபா அணி

தனித்து செயல்படுவது சிரமம் என்பதை உணர்ந்த, ஜெ., அண்ணன் மகள் தீபா, அ.தி.மு.க.,வை கைப்பற்றும் முயற்சியில் இறங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டு அணிகளாக பிளவுபட்டுள்ளது. இதில், பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்த, ஜெ., அண்ணன் மகள் தீபா, திடீரென எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையை துவக்கினார்.சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், தனித்து களம் இறங்கினார். அவரது, 'பல்டி' முடிவுகளால், ஆதரவாளர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்கள், பன்னீர் அணிக்கும், சசிகலா அணிக்கும் தாவினர்.

மனைவி தீபாவுடன் நடந்த சண்டை காரணமாக, கணவர் மாதவன் பேட்ரிக், தனிக்கட்சி துவங்கினார். அவருடன் சிலர் சென்றதால், தீபா பேரவை பலமிழந்தது. மேலும், அவரது பேரவையும், முறைப்படி பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இப்படி ஆதரவு குறைந்த நிலையில், தனித்து செயல்படுவது சிரமம் என்பதை, தீபா உணர்ந்துஉள்ளார். எனவே, அ.தி.மு.க.,வின் மூன்றாவது அணியாக செயல்பட்டால், கட்சியை கைப்பற்றலாம் என, அவருடன் இருப்போர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை சார்பில், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை, தி.நகரில் உள்ள, தலைமை அலுவலகத்தில் நடந்தது.அதில் எடுத்த முடிவு குறித்து, தீபா பேரவையினர் கூறியதாவது:ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டு அணிகளாக பிரிந்து, கட்சி மற்றும் இரட்டை இலையை கைப்பற்ற, போட்டி நிலவுகிறது. 

ஜெ., நலத்திட்டங்களை செயல்படுத்தவதில், அரசுக்கு ஆர்வம் குறைந்து விட்டது. இரு அணியினரிடம் ஏற்பட்ட போட்டியால், அ.தி.மு.க.,வையும், இரட்டை இலை சின்னத்தையும் பறி கொடுத்து விட்டனர்.எனவே, தீபா பேரவையை, அ.தி.மு.க.,வின் துணை அமைப்பாக மாற்றி, அ.தி.மு.க., - தீபா அணியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். 

இதன் மூலம், இரட்டை இலை மற்றும் கட்சியை மீட்பது என்றும், தீபாவை பொதுச்செயலராக்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.