Mar 08

கச்சதீவை மீட்பதுதான் பிரச்சினைக்குத் தீர்வு: வலியுறுத்தும் ஸ்ராலின்

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீட்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு இன்று அவர் அனுப்பிய கடிதத்தில், ''கடந்த 6-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இந்திய மீனவர் கே.பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 21 வயது நிரம்பிய அந்த இளைஞரின் எதிர்கால கனவுகள் இலங்கை கடற்படையால் சிதைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தங்களின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

தங்களின் வாழ்வாதாரத்துக்காக மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகளை பறிமுதல் செய்வது, மீன்பிடி பொருள்களை சேதப்படுவது ஆகியவை தொடர்ந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது தமிழக மீனவர்கள் இடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மீன் பிடிக்க கடலுக்குள் சென்றால் உயிருடன் திரும்ப முடியாதோ என் பீதியை மீனவர்களிடையே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் என அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த இலங்கை ராணுவம், தற்போது மீனவர்களை சுட்டுக் கொல்வது என முடிவெடுத்துள்ளது. இதனை மத்திய அரசு ஒரு நிமிடம் கூட வேடிக்கை பார்க்கக் கூடாது.

இலங்கை கடற்படையின் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து, மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்க தூதரக ரீதியாக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான உரிமையை மீட்டெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணவும், மீனவர் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.