May 13

அமைதிகாக்கும் படையினரை அனுப்புவது குறித்த தீர்மானத்திற்கு கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் கனடா

மாலிக்கு நூற்றுக்கணக்கான அமைதிகாக்கும் படையினரை அனுப்பி வைப்பது குறித்து தீர்மானிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ சரியான அணுகுமுறை என்பதையும் சரியான பணி என்பதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் வீரர்களுக்கு சிறந்த பயிற்சி வழங்கப்படுகின்றது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். சர்வதேச அமைதிகாப்பு நடவடிக்கையில் கனேடியர்களை எவ்வாறு ஈடுபடுத்துவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைதிகாப்பு பணியில் படையினரை ஈடுபடுத்துவது குறித்த பதிலுக்காக தாம் பொறுமை இழந்து வருவதாக சில நாடுகள் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.

மாலியில் வீதியோர வெடிகுண்டுகள் மற்றும் ஏனைய வெடிபொருட்கள் போன்றமை பணியில் ஈடுபட்டுள்ள அமைதிகாப்பு படையினருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவதால், அவர்களுக்கான போக்குவரத்து ஹெலிக்கொப்டர்களை வழங்கி உதவ வேண்டும் என்று கடந்த ஆண்டு ஐ.நா, கனடாவிடம் கேட்டுக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.