Mar 08

ஒன்பதாவது நாளில் கேப்பாப்புலவுப் போராட்டம்: கண்காணிக்கும் பொலிஸார்

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினர் வசமுள்ள தமதுகாணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மக்கள் முன்னெடுத்துவரும் கவனயீர்ப்புப்போரட்டம் இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடரப்பட்டு வருகின்றது.
 
யுத்தம் நிறைவடைந்து எட்டு வருடங்களாகியும் தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்த இடத்தில் தங்களை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற அனுமதிக்காதது தான், நல்லாட்சி அரசின் நல்லிணக்கமா? எனக்கேள்வி எழுப்புகின்றனர் கேப்பாப்புலவு மக்கள்.
 
கோப்பாப்புலவான தங்களது சொந்த கிராமம் பற்றி போராட்டத்தில் ஈடுபடும் அக்கிராம மக்கள் இவ்வாறு தெரிவித்தனர். கேப்பாப்புலவு கிராமம் புலக்குடியிருப்பு சூரிபுரம் கேப்பாப்புலவு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
 
கேப்பாப்புலவு கிராமானது மிகவும் பழமைவாய்ந்த பூர்வீக விவசாயக் கிராமமாகவுள்ளதுடன் முன்னைய காலத்தில்  கேப்பை (குரக்கன்) பயிரிடப்படும் நிலமாக இருந்தமையால் இதற்கு கேப்பாப்புலவு எனப் பெயர் வந்துள்ளது.
 
இந்நிலத்திலேயெ எங்களது பல தலைமுறைகள் வாழ்ந்துள்ளன. அவர்களைத் தொடர்ந்து நாங்களும் இந்தமண்ணில் வாழ்ந்து தான் இறுதியுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்றோம்.  எங்களை மெனிக்பாம் முகாமிலிருந்து அழைத்து வந்து மீள்குடியேற்றம் என்ற பெயரில் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைத்திருக்கின்றனர். இதில் எப்படி வாழமுடியும்.
 
எங்கள் பரம்பரை எமக்கு தேடித்தந்த எங்களது நிலத்தை தான் நாங்கள் கேட்கின்றோம். இராணுவத்தின் நிலத்தை கேட்கவில்லை என போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். கடந்த ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப்போராட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் ஆதரவுகளையும் வழங்கி வருகின்றனர்.
 
இதேவேளை குறித்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களையும் அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களையும் கண்காணிக்கும் கமெராக்கள் மூலம் படையினர் அவதானித்து வருவதாகவும், இராணுவப்புலனாய்வாளர்கள், பொலிசார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஆயினும் இவற்றை மறுத்துள்ள இராணுவத்தினர், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தற்போதுள்ள குறித்த பகுதியின் பாதுகாப்புக் கருதியே குறித்த பகுதிகள் வழமை போன்று கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தனர்.