May 13

கஞ்சா போதைப் பொருள் சட்டபூர்வமாக்கப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி

பிரித்தானியாவில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவு செய்யப்பட்டால் கஞ்சா போதைப் பொருள் சட்டபூர்வமாக்கப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

லிபரல் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையிலேயே குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கட்சி தெரிவு செய்யப்படும் பட்சத்தில், கஞ்சா போதைப் பொருள் விற்பனை மற்றும் வளர்ப்பு சட்டபூர்வமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கஞ்சா போதைப் பொருளை விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி, கஞ்சா போதைப் பொருளை உபயோகிக்கும் ஒருவர் அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் எனவும் அல்லது ஐந்து ஆண்டு சிறைவாசத்துடன் அபராதப் பணம் செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த தண்டனை நடைமுறையில் செயற்படுத்தப்படுவது இல்லை என பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, கஞ்சா போதைப் பொருள் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என கடந்த வாரம் தென்கிழக்கு வேல்ஸில் பேரணி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது.