Mar 08

தினேஷ் குணவர்தனவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் ஒரு வார காலத்திற்கு கலந்துகொள்வதைத் தடுக்கும் தீர்மானமொன்று இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.

அவரை வெளியேற்றும் தீர்மானத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ளது. தினேஸ் குணவர்தனவின் பாராளுமன்ற நடவடிக்கைகளை இடை நிறுத்துவது தொடர்பிலான தீர்மானத்திற்கு ஆதரவாக 85 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். எதிராக 22 உறுப்பினர்கள் மாத்திரம் வாக்களித்ததுடன், மக்கள் விடுதலை முன்னணி இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் நிலவிய அமளி துமளியால் இரண்டாவது தடவையாகவும் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் கருஜயசூரிய ஒத்துவைத்தார். பாராளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடியபோது, தேசிய சுதந்திர முன்னணியை தனியான கட்சியாக அறிவிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் மீண்டும் அமளி ஏற்பட்டது.

சபாநாயகரின் அறுவுறுத்தல்களை கவனத்திற்கொள்ளாது பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் சபையில் கருத்துக்களை முன்வைக்க முயன்றதால் சபை நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இதன்போது இன்றைய சபை நடவடிக்கைகளில் பிரசன்னமாக தேவையில்லாத உறுப்பினராக தினேஷ் குணவர்தனைவை சபாநாயகர் அறிவித்துள்ளார். இதற்கமைய அவரை சபையில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அமளியைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் இன்று இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நிலையில் அவர் தானாகவே சபையிலிருந்து வெளியேறினார்.