May 13

பொலிவுறு நகரங்கள் திட்டம்: தமிழக அரசுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை

பொலிவுறு (ஸ்மார்ட் சிட்டி) நகரங்கள் குறித்து தமிழக அரசுடன் மத்திய அரசு நாளை ஆலோசனைக் நடத்த உள்ளது.மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மந்திரி வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை (நாளை) ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் நடைபெற உள்ளது. பொலிவுறு (ஸ்மார்ட் சிட்டி) நகரங்கள், ‘அம்ருத்’ எனப்படும் நகர்ப்புற உருமாற்றம் மற்றும் புத்தாக்கத்துக்கான அடல் இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.இந்த கூட்டத்தில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.