May 13

53 லட்சம் தொண்டர்கள் ஆதரவு; தேர்தல் கமிஷனில் பன்னீர் அணி ஆதாரம்

அ.தி.மு.க., - பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில், 53 லட்சம் தொண்டர்கள் கையெழுத்திட்ட, பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, அறிவிக்க கோரி, பன்னீர் அணி சார்பில், தேர்தல் கமிஷனில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது, இரட்டை இலை சின்னம் கோரி, இரு அணியினரும், தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர். அப்போது, பன்னீர் அணி சார்பில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கையெழுத்திட்ட, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.அவற்றை பரிசீலனை செய்து, உடனடியாக முடிவு எடுக்க முடியாததால், இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் கமிஷன் முடக்கியது. பன்னீர் அணியினர், அதிரடியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது, சசிகலா அணியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து அவர்கள், மாவட்ட செயலர்கள் உதவியுடன், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம், பிரமாண பத்திரத்தில், கையெழுத்து வாங்கும் பணியை துவக்கினர்; அதற்கு, போதிய வரவேற்பு இல்லை.அதனால், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, தேர்தல் கமிஷனில், கூடுதல் கால அவகாசம் கேட்டனர். அதன் காரணமாக, இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை, ஜூன், 16க்கு, தேர்தல் கமிஷன் தள்ளி வைத்துள்ளது.இந்நிலையில், நேற்று, பன்னீர் அணி சார்பில், 12 ஆயிரத்து, 600 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.