May 13

திருகோணமலையில் வெப்பம் அதிகரிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது.

இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தின் கிராமப் புறங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. கிணறுகளின்  நீர் மட்டம் குறைந்துள்ளதுடன், குளங்களிலும் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து காணப்படுகின்றது.

குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் நீண்ட  தூரம் சென்றே குடிநீரைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குளங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதனால் ஆடு, மாடு முதலான கால்நடை வளர்ப்பாளர்கள் கால் நடைகளுக்கான நீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை சிறுதோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களும், செங்கல்  உற்பத்தியாளர்களும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை நகரப் புறங்களில் உள்ளவர்கள் நீர் நிலைகளையும், குளங்கள் மற்றும் கடற்கரையோரங்களையும் நாடிச் செல்வதையும் காணக்கூடியதாகவுள்ளது.