Jan 17

சுவிட்சர்லாந்தை உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்கு: அரசு வழக்கறிஞர் வெளியிட்ட முக்கிய தகவல்

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பிராந்தியத்தில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை முடித்து வைப்பதாக திங்களன்று அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய குற்றவாளி சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் கடந்தும் இதுவரை பொலிசில் சிக்காத நிலையிலேயே இந்த முடிவுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தை உலுக்கிய இந்த வழக்கு தொடர்பாக பொதுமக்கள் அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோதும், குற்றவாளியை கைது செய்ய முடியாமல் பொலிசார் திணறினர்.

சம்பவம் நடந்தபோது 26 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் 2015 யூலை மாதம் மாலையில் தனது இருசக்கரவாகனத்தின் சென்றுகொண்டிருக்கும்போது மர்ம நபரால் தாக்கப்பட்டு, அருகாமையில் உள்ள மறைவிடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார்.அந்த சம்பவத்தில் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் தற்போது கீழங்க வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்துள்ள விசாரணையில் எந்த முன்னேற்றமும் எட்டாததை கண்டு குற்றவாளி தொடர்பில் தகவல் தெரிவிக்கும் நபருக்கு 10,000 பிராங்க் சன்மானம் என அறிவித்து பின்னர் அந்த தொகையை இருமடங்காக்கினர்.

மட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் 371 பேரிடம் டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது.மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள 1,863 மொபைல் போன்களின் தகவல்களை சேகரித்து பகுப்பாய்வுக்கு உட்படுத்தினர்.இருப்பினும் மாயமான குற்றவாளியை மட்டும் பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி 19ல் இருந்து 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் எனவும் சிரமப்பட்டு ஜேர்மன் மொழி பேசுபவர் என்பது உள்ளிட்ட சில தகவல்கள் மட்டுமே பொலிசாரின் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.