May 12

மதவாதம் இனவாதம் ஒன்றுகலந்த சிங்களப் பவுத்த பண்டிகை கொண்டாட இலங்கை செல்வதாக “தமிழில்” ட்விட் செய்த மோடி! தனக்குத் தெரியாத மொழியில் ட்விட் செய்த “உளவியல்” அவர் அங்கு சென்றது ஏன் என்பது பற்றி சொல்லிவிடுகிறது சாட்சி!

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும். அந்தக் கதையில் வரும் நடிகர் ஒரு சிறுமியாக அல்லது சிறுவனாக இருப்பார். ஆனால் இப்போது கார்ப்பொரேட் காலத்தில்மிகப் பெரிய மனிதர்களுக்கும்கூட அந்தக் கதையின் பாத்திரத்தை ஏற்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் புத்தர் பிறந்த நாள் எனும் “வேசக் தினம்” கொண்டாடப்படுகிறது. 

இதனை இந்த ஆண்டு ‘உலக புத்த மத மாநாடாக’ ஐ.நா அவை நடத்துகிறது என்று சொன்னாலும் இதன் சூத்ரதாரிகள் இலங்கையும் இந்தியாவும்தான்.

2004ல் விடுதலைப் புலிகளுடன் போர் நடந்த காலத்தில் மிகத் தந்திரமாக இலங்கையை பவுத்த மதவாத மற்றும் சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி நாடாக அங்கீகரித்ததன் அடையாளமாகத்தான் இந்த வேசக் தினம் உருவானது. இது 14ஆவது ஆண்டு பண்டிகைக் கொண்டாட்டம்.

இதில் இன்றும் நாளையும் (மே 11 மற்றும் 12 தேதிகளில்) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பவுத்த சிங்களப் பிக்குகள் மற்றும்  ஆட்சியாளர்களுடன் அளவளாவிக் களிக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

இதில் கலந்துகொள்ள அவர் இலங்கை செல்வதைத்தான் ட்விட்டரில் தமிழ் மொழியில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் தெரியாத அவர் என்றுமில்லாமல் இப்போது பார்த்துஅதுவும் தான் இலங்கைக்குச் செல்வது பற்றி தமிழில் ட்விட் செய்தது ஏன்?

மோடி இந்தப் பண்டிகையில் கலந்துகொள்வார் என்று ஏற்கனவே முதலில் அறிவித்தவர் இலங்கையின் அயலுறவுத் துறை அமைச்சர்தான். அந்த செய்தியைப் பார்த்ததும் “தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையை இன்றளவும் கைவிடாது தொடரும் பவுத்த மதவாதசிங்களப் பேரினவாத இலங்கை அரசின் சிறப்பு விருந்தினராக மோடி அங்கே செல்ல வேண்டாம்” என தமிழகத்திலிருந்து குரல்கள் எழுந்தன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மதசார்பற்ற நாட்டின் பிரதமர் மோடி மதவெறி கொண்ட இலங்கையின் மத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.

இலங்கையில் தமிழர் பகுதி ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதையும் 2009 - இனப்படுகொலை விசாரணை முடக்கப்பட்டிருப்பதையும் குறிப்பிட்டுஇதையெல்லாம் மறைக்கும் விதமாக தமிழர்களுக்கும் இலங்கை அரசுக்குமிடையே இணக்கமான சூழல் நிலவுவதான ஒரு மாயத்தோற்றத்தை உலகிற்குக் காட்டவே இத்தகைய ஏற்பாடுகள்; எனவே இந்தியப் பிரதமர் அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.

ஆனால் இறுதியில் இலங்கை செல்வதாக தமிழிலேயே ட்விட் செய்துவிட்டுக் கிளம்பினார் மோடி. இதில் தமிழர்கள் மத்தியில் கிளம்பிய எதிர்ப்புக்கு எதிர்வினையாகவே தமிழில் அவர் ட்விட் செய்திருக்கிறார்.

“எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற பாணியில் அவர் இதனைச் செய்திருந்தாலும் இதனாலெல்லாம் உண்மையை மறைத்துவிட முடியாது என்பதும் அவருக்குத் தெரியாததல்ல. இருந்தும் அப்படிச் செய்கிறார் என்றால் அதற்கு அர்த்தமே வேறு.

வேறென்ன? “நான் எங்கு போவது அல்லது போகக்கூடாது என்று சொல்வதற்கு நீ யார்? அப்படிச் சொல்ல உனக்கென்ன உரிமை?” என்பதுதான்.

இதில் அவர் தவிர்ப்பது அல்லது தட்டிக்கழிப்பது தனது பொறுப்பினையும் ஜனநாயகப் பண்பினையும்தான்.

பிரதமராக தான் பதவியேற்றபோதே இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தவர் அவர். முதல் வேலையாக அப்போது அவர் செய்ததுஇ இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை அழைத்து கவுரவித்ததுதான்.

இதிலிருந்து தெரிவது என்ன? இனப்படுகொலையை நியாயப்படுத்துபவர் மட்டுமல்ல; அதைக் கொண்டாடுபவரும்கூட அவர் என்பதுதான்.

அப்படிப்பட்ட ஒருவரிடம் நீதி நேர்மையை எதிர்பார்த்தால் அது மடத்தனமே.

அவரிடம் நாம் முறையிட்டு வேண்டுகோள் விடுத்து இதுவரை எந்தக் காரியமும் நடந்ததில்லை என்பதுதான் உண்மை. கச்சத்தீவுமீனவர் மீது துப்பாக்கிச் சூடுகாவிரி மேலாண்மை வாரியம் மீத்தேன்ஹைட்ரோ கார்பன் நீட் தேர்வு மருத்துவர் பட்டமேற்படிப்பு இடஒதுக்கீடு இப்படி பிரச்சனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில்தான் தற்போது அவர் இலங்கைக்குச் சென்ற விவகாரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கெல்லாம் பதில் சொல்ல  தமிழர்கள் நாம் ஓரணியில் திரள வேண்டும் என அறைகூவி அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.