Jan 13

கூட்டு அரசு தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகள்! விரக்தியில் தமிழ் மக்கள்!

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து பொது எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவு வாக்குகளால் பெரு வெற்றியீட்டி ஜனாதிபதியாகப் பதவியேற்று மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன.

வடக்கு– கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ச அரசை வௌியேற்றி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்குடன் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து நல்லாட்சி என்ற பெயரில் கூட்டு அரசு பொறுப்பேற்று 100 நாள் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கூட்டு அரசுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் விரும்பியோ,விரும்பாமலோ தனது ஆதரவை இன்று வரை வழங்கி வருகின்றது.

மூன்று வருட கால ஆட்சிமுடிவடைந்து அரசு தனது நான்காவது வருட ஆட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் மைத்திரி அரசு ஆர்வம் காட்டாது புறம் போக்காகவே நடந்து வருகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கூட்ட அரசு பெரும்பான்மை சிங்கள மக்களையும், படைத்தரப்பையும் திருப்திப்படுத்துவதிலும், பன்னாட்டுச் சமூகத்திடமிருந்து எழுகின்ற கேள்விகளுக்கு முரண்பாடான பதில்களை வழங்குவதிலும் இன்று வரை காலத்தைக் கடத்திக் கொண்டி ருக்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைகளை மறுத்து வரும் கூட்டு அரசு , சமூகத்தின் மத்தியில் தனது போலி முகத்தைக் காட்டி பன்னாட்டுச் சமூகத்தையும் ஏமாற்றி வருவதாக தமிழ் மக்கள் முற்று முழுதாக நம்புகின்ற நிலையில், தற்போதைய கூட்டு அரசு மீதான நம்பிக்கையையிழந்து தமிழ் மக்கள் விரக்தியின் விளிம்புக்கே சென்று விட்டனர்.

இலங்கை அரசியலில் கொழும்பு ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வேதும் காணாது அதனை இழுத்தடிக்க முயல்வதும், காலத்தைக் கடத்தி வருவதும், தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் என்னதான் பிரச்சினை இருக்கிறது என்று கேள்வி கேட்பதும், புதிய விடயங்களல்ல.

70 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற ஐக்கிய தேசியக்கட்சி, மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசுகள், எப்படி தங்கள் இஷ்டம் போல் தமிழர்கள் பிரச்சினைகளைக் கையாண்டார்களோ அதைப் போன்றே கூட்டு அரசும் அந்தப் போக்கிலேயே நடந்து வருகின்றது.

கூட்டு அரசின் நிர்வாகத்தில் தமிழ் மக்களது பிரச்சினைக்கு விமோசனம் கிடைக்கும். புதிய அரசு மூலம் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் என தமிழ்த் தலைமைகள் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் தமிழ் மக்கள் எந்த ஆட்சித் தரப்பினரையும் நம்பத் தயாரில்லை என்பதை இந்தக் கூட்டு அரசின் மூன்று வருடகால ஆட்சி தெட்டத்தௌிவாக உணர்த்தி வைத்துள்ளது.

இந்த அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் செயற்பாடுகளும், பேச்சுக்களும் தமிழ் மக்களை ஏமாற்றுவதும், குழப்புவதுமாகவே இருக்கின்றன. கடந்த வருடம் தமிழ் மக்கள் காணாமல் போன தமது உறவுகள் தொடர்பில் கண்டறிந்து உண்மை நிலையைச் சொல்லுங்கள் எனக் கேட்டு போராட்டங்களை வருடம் முழுவதும் பல கோணங்களில் நடத்தியிருந்தனர்.

பூர்வீக நிலங்களை விடுவிக்காது அரச படைகள் அவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு இருப்பது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டும் சாத்வீகப் போராட்டங்களைச் சளைக்காது முன்னெடுத்திருந்தனர்.

இன்றைய கூட்டு அரசானது பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் படையினர் ஆக்கிரமித்திருந்த காணிகளில் சிலவற்றை விடுவித்திருந்தாலும், இன்னமும் பொதுமக்களது பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

படையினரோ, தேசிய பாதுகாப்பு கருதி அக்காணிகளை மக்களிடம் திருப்பிக் கொடுக்க முடியாது எனக் கையை விரிக்கின்றனர். படையினர் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி தமிழ் மக்களின் காணிகளில் விவசாயம் செய்கின்றனர். வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பரம்பரை நிலங்களை படையினர் தமது உடமையாக்கிக் கொண்டு அவற்றை கடந்த பல ஆண்டுகள் காலமாக கையகப்படுத்தி வைத்திருப்பது, விடுவிக்காமல் சொந்தம் கொண்டாடுவது பெரும் மனித உரிமை மீறல் என்று தமிழ் மக்கள் தரப்புகள் மட்டுமன்றி பன்னாட்டுச் சமூகமும் தீவிரமாகக் குற்றம் சாட்டி வருகின்றன.

இன்றைய கூட்டு அரசு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கத் தவறிவிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்கள் குறித்து அக்கறை காட்டி செயற்படவும் தவறி விட்டுள்ளது.

30 வருடகாலப் போர் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் ஏக்கப் பெருமூச்சுடன் முகாம்களிலும் பிற இடங்களிலும் தொடர்ந்தும் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிக்கின்றனர்.

மலர்ந்திருக்கும் இந்தப் புதிய ஆண்டிலாவது கூட்டு அரசு தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கத் தவறினால், அது மக்களை மிகுந்த விரக்தி நிலைக்கு இட்டுச் செல்வதுடன், அரசு மீதான வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும். இவையாவும் தவிர்க்க முடியாததாகி விடும்.

ஏற்கனவே இந்தக் கூட்டு அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்ற நிலையில், மைத்திரிபால சிறிசேன எந்த முகத்துடன் தமிழ் மக்களைச் சந்திப்பார்? இந்தக் கூட்டு அரசால் தமிழ் மக்களுக்கு எந்த விதமான விமோசனமும் கிடையாது என்ற முடிவுக்கு தமிழ் மக்கள் வருவதும் தவிர்க்க முடியாததாகி விடும்.

முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க போர் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் கழிந்த நிலையிலும், அரசால் தமிழ் மக்களது மனங்களை வெல்ல முடியவில்லையென கடந்த தமிழ்– சி்ங்கள புத்தாண்டு தினத்தையொட்டித் தாம் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வைத்துக் குறிப்பிட்டிருந்தார்.

போர் காரணமாக விரக்தியுற்ற தமிழ் மக்களது உள்ளங்களைச் சீர் செய்யும் பணிகளை இன்றைய கூட்டு அரசு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டி ருந்த போதிலும், யதார்த்தத்தில் அத்தகைய சமிக்ஞை எதனையும் காண முடியவில்லை.

கூட்டு அரசின் மூன்று ஆண்டு கால நிர்வாகத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகளில் எவைதான் சீர்செய்ய்ப்பட்டிருக்கின்றன?

காணாமல் போனோர் விடயத்தில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க என்ன கூறினார்கள் என்பதை மறந்து விட்டனரா தமிழ் மக்கள்?

ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா போன்றோர் கூட்டு ஆட்சி அரசின் மூன்று ஆண்டு கால நிர்வாகத்தில் யாழ்ப்பாணத்துக்குப் பல தடவைகள் வந்து திரும்பியிருந்த போதிலும் அவர்களால் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடிந்ததா?

இன்றைய கூட்டு அரசும் சிறுபான்மையினரான தமிழ்மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் வழங்கி விடக்கூடாது என்பதில் தென்னிலங்கையிலுள்ள கடும் இனம் வாதப்போக்காளர்களும், மகிந்த தரப்பு அணியினரும் நெருக்கடிகளைக் கொடுத்து வரும் நிலையில், கூட்டு அரசு இப்படிப்பட்ட நெருக்கடிகளைத் தூக்கியெறிந்து விட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை துணிச்சலோடும், நேர்மையோடும் தீர்த்து வைப்பதற்கு தனது மிகுதி ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக முன்வருமா?

என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தாலும், மைத்திரி அரசு வழங்கிய வாக்குறுதிகள் ஒன்று கூட இதுவரையில் பூரணமாக நிறைவேற்றப்பட்டதில்லை என்ற உண்மை பூதாகாரமாகத் தலைதூக்கி நிற்கிறதே?

தமிழ் மக்களின் மனிதாபிமான சிறிய தேவைகளைக் கூடக் கையாள முடியாது இன்றைய கூட்டு அரசு பின் வாங்கி வருகின்றதோ என்ற அச்சம், கவலை தமிழ் மக்கள் மத்தியில் நிறையவே உள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக்காக வட பகுதிக்கு வரவிருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக என்ன சாக்குப்போக்கு, நொண்டிச் சாட்டுக்களை முன்வைத்து தம்மைத் தக்க வைத்துக் கொள்ளப் போகின்றனரோ என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் தலைதூக்கி நிற்கிறது.

ஆனாலும் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் புதைப்பது போன்று, ஏதாவது புனைகதைகளை இட்டுக்கட்டி தமிழ் மக்கள் காதுகளில் பூச்சுற்றித் தத்தமது தரப்புகளுக்கான வாக்கு வேட்டையை இவர்கள் முன்னெடுக்கத்தான் போகின்றார்கள்.

அந்த வகையில் அவர்களது வழமையான பொய் வாக்குறுதிகளுக்கு தாளம் போட எமது தரப்பிலும் ஒரு கூட்டத்தினர் தயாராக உள்ளனர் என்பது தான் நிதர்சனம்.

தமிழ் மக்களின் தற்போதைய அடிப்படைப் பிரச்சினைகளுக்கும், அவர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த நியாயமான போராட்டங்களுக்கும் இன்றைய கூட்டு அரசு என்ன பதிலைக் கொடுக்கப் போகின்றது.

தமிழர்களின் மனதை வெற்றி கொள்ளும் வகையில் ஜனாதிபதியின் வருகை அமையுமா? அல்லது ஏமாற்றம்தான் மிஞ்சுமா?

தமிழ் மக்களின் கடந்த வருடப் போராட்டங்களும், வேண்டுதல்களும் இன்றைய கூட்டு அரசால் புறந்தள்ளப்பட்டே வருவதனால், இந்த வருடமும் தமிழ் மக்களின் தொடர் போராட்டங்கள் முழு வீச்சாக முன்னெழுவது தவிர்க்க முடியாததாகும் என்பதில் சந்தேகம் கிடையாது.