Jan 13

நன்றி மறவாமைப்பண்பின் உயர் பேணுகையாக விளங்கும் தைப்பொங்கல் பண்டிகை- சைவப்புலவர் எஸ்.ரி.குமரன்

நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது.

தமிழர்களின் நாட்காட்டியின் படி தை மாதம் முதல் நாள் தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தை மாதம் தமிழ் மக்களுக்கு வழிகாட்டும் மாதமாகவும் அமைகின்றது. தமது உழைப்புக்கு உதவிய இயற்கைக்கு நன்றியுணர்வினை தெரிவிக்கும் திருநாளாக தைப்பொங்கல் விளங்குகின்றது.

இந்த தைப்பொங்கல் திருநாளில் உழவர்கள் தமது வேளான்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

இதற்காக அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் அவனுக்காக பொங்கலிட்டு தமது நன்றியை வெளிக்காட்டுக்கின்றனர். உழவர்கள் மாத்திரமல்லாமல் ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக இன்றைய நாள் போற்றப்படுகிறது.

தைத்திருநாள் உழவர்களின் நன்றிக்கடன் தீர்க்கும் நாளாக அமைக்கின்றது. உணவு உற்ப்பத்திக்கும் உயிரினங்களின் வளர்ச்சிக்கும் தேவையான வெப்பம் வெளிச்சம் மழை என்பவற்றினை சூரியன் வழங்குகின்றான். ஆதலினால் சூரியனுக்கு நன்றிக்கடனினை உழவர்கள் செலுத்துகின்றார்கள். தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது ஆண்றோர்களின் வாக்காகும். தை பிறந்து விடால் எல்லோர் மனதிலும் மகிழ்வு ஏற்ப்படும். நல்ல விடயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்ப்படும்.

தைத்திருமகள் தங்களது வாழ்வை புத்தொளி வீசச் செய்வாள் என்ற நம்பிக்கையுடன் தமிழர்கள் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.

தை மாத காலப்பகுதியில் சூரிய பகவான் தனு இராசியிலிருந்த மகர இராசிக்கு பிரவேசிக்கின்றான். இக்காலம் உத்தராயணகாலம் எனப்படும். இது மகர சங்கிராந்தி எனப்படுகின்றது. இத்தினத்தினையே நாம் தைத்திருநாளாக கொள்கின்றோம். உழவன் தனது முதற்பயனை கதிரவனுக்குப் படைத்து பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இச் செயற்ப்பாடு தமிழர்கள் மத்தியில் தொன்று தொட்டு வழங்கி வந்துள்ளது.

தைப்பொங்கல்  பண்டிகையானது  கடவுள் வழிபாட்டினையும் சைவத்தமிழ் மக்களின் மரபு வழி விழுமியங்களான நன்றி மறவாமை பகிர்ந்துன்னல் அன்பு அறம் அகிம்சை புனிதம் பேணுதல் முதலான பண்புகளினை வளர்க்கும் நிகழ்வாக அமைகின்றது. இத்ததகு சிறப்பு மிக்க தைப்பொங்கல் பண்டிகையானது. மனித வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைகின்றது. இந்நாளில் தம்மையும் தம்முடைய சூழலினையும் புனிதப்படுத்தி நன்றியுணர்வோடு இறைவனை வழிபட்டு பெற்றோர் பெரியோருடைய ஆசியினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி மறவாமைப்பண்பின் உயர் பேணுகையாக விளங்கும் தைப்பொங்கல் பண்டிகையானது தமிழ்ர்களின் மனங்களில் குதுகலம் நம்பிக்கை புத்துணர்வை வழங்கும் திருநாளாக விளங்குகின்றது. இந்நாளில் நாம் அனைவரும் நன்றியுணர்வு உள்ளவர்களாகவும் பகிர்ந்துண்ணும்; பண்புள்ளவர்களாகவும் வாழப்பழகிக் கொள்ள வேணடும்.   பொங்கல் விழா உழைக்கும் மக்கள் இயற்கைக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. நன்றி கூறும் திருவிழாவாக தைப்பொங்கல் அமைவதனால் அனைத்து மக்களிடத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக தைப்பொங்கல் அமைந்துள்ளது.

சைவப்புலவர்  எஸ்.ரி.குமரன்

கௌரவ செயலாளர்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம்