Jan 13

பருவமழையின் எதிரொலி; தீபகற்ப மலேசியர்களை வாட்டுகிறது குளிர்!

தீபகற்ப மலேசியாவில் பல பகுதிகள் குளிராகவும், ஈரமாகவும், சில இடங்களில் தொடர் மழை பெய்த வண்ணமாக இருக்கின்றது. மக்கள் பலர், குளிர்காலத்திற்கு ஏதுவான ஆடைகளைத் தான் கடந்த சில நாட்களாக அணிந்து வருகின்றனர். 

கிள்ளான் பள்ளத்தாக்கின் வெப்ப நில 22 செல்சியஸாக குறைந்துள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலாப்பிலா பகுதியின் வெப்ப நிலை 21 செல்சியஸாக குறைந்துள்ளது. பொதுவாக அப்பகுதியின் வெப்ப நிலை 31 செல்சியஸிலிருந்து 32 செல்சியஸாக இருக்கும் என்று வானிலைத் துறை தெரிவித்துள்ளது. 

இதனிடையில், கேமரன் மலைப் பகுதியில் நேற்றைய வெப்ப நிலை 15 செல்சியஸாக பதிவாகியிருந்தது. ஐரோப்பிய நாடுகளில் உணரும் குளிரைப் போன்று அப்பகுதியில் குளிரை மக்கள் உணர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வடக்கிழக்கு பருவமழைக் காலமான, நவம்பர் மாத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை, இத்தகைய குளிர் காலம் ஏற்படுவது என்பது இயல்பானதே என்று வானிலைத் துறை தலைமை இயக்குநர் அலூய் பஹாரி கூறினார். 

"தீபகற்ப மலேசியாவில், தொடர்ச்சியான மழை, வேகமான காற்று போன்றவற்றால் குளிர் காலத்தை மக்கள் இம்முறை அதிகமாக உணர்கிறார்கள். நள்ளிரவு நேரங்களில் இந்தக் குளிர் சற்று அதிகரித்துள்ளது" என்று அவர் கருத்துரைத்தார். 

இதனிடையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி இந்தக் குளிரானது மறையக் கூடும் என்று வானிலைத் துறை பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.