Mar 07

ஜெயலலிதா மரணம்: உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார் பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று புதன்கிழமை சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்த்தை துவங்கினார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருவதுடன், சிபிஐ விசாரணையும் கோரி வருகிறார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை. உலகத்தரத்திலான சிகிச்சையே அவருக்கு அளிக்கப்பட்டது என எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர், அப்பல்லோ மருத்துவமனை, இந்திய மருத்துவக் கவுன்சில் உள்ளிட்டவை விளக்கம் அளித்து அவற்றின் அறிக்கையை தமிழக அரசு திங்கள்கிழமை (மார்ச் 6) வெளியிட்டது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதனை ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மதுசூதனன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளார்.

உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் மதுசூதனன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்பட திரைத் துறையைச் சேர்ந்த அதிமுகவினர் பலரும் பங்கேற்று உள்ளனர்.

இதே விவகாரத்துக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

செங்கல்பட்டில் நடைபெறும் போராட்டத்துக்கு வா.மைத்ரேயன், ஆவடியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதர பகுதிகளில் அந்த மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தலைமை வகிக்க உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முதலில் காவல் துறை அனுமதி தராமல் இருந்தது. தற்போது காவல்துறையின் அனுமதியுடன் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.