Mar 07

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண்க: ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் அமைதியான போராட்டம் தொடர்பில் அரசின் கவனத்துக்கு கொண்ட சென்ற போதிலும் இதுவரை எவ்வித உறுதிமொழிகளும் வழங்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வடகிழக்கில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க விசேட திட்டமொன்றை அரசு வகுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 


நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி அமைச்சின் உற்பத்தி வரிகள் சம்மந்தமான விசேட ஏற்பாடுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 


அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்தும் சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி அரசியல்வாதிகளான நாங்கள் அங்கு சென்று அவர்களது பிரச்சினைகள் - கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினோம். 


ஆயிரக்கணக்கான ஏழை இளைஞர்கள் தமது வாழ்வில் ஐந்து வருடங்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கல்வி கற்று பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களுக்கு எவ்வித அரச நியமனங்களும் வழங்கப்படவில்லை.  


அந்தப் பட்டதாரிகள் தங்களுக்கு வேலைக்கிடைக்காத காரணத்தினால் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படித்த இளைஞர்கள் வீதிக்கு வந்து இரவு; பகலாக,  வெயில் என்றும் பாராது ; மழை என்றும் பாராது கடந்த மூன்று வாரங்களாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அமைச்சு உரிய நடவடிக்கையை அவசரமாக எடுக்க வேண்டும். 


வடக்கு கிழக்கு மாகாணங்களில் வேறு தொழில்கள் இல்லாமையினால் இவர்களது பிரச்சினைக்கு அவசரமாக தீர்வு வழங்கப்பட வேண்டும்.  வடக்கில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக த.தே.கூ. சபையில் குறிப்பிட்டது. அதேபோல, கிழக்கில் இருந்த ஒரே ஒரு தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை. அதுவும் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். ஆகவே, அந்த தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க வேண்டும். அதற்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களை அரசு கொண்டுவரவேண்டும். 


எமது இளைஞர்கள் படித்து பட்டம் பெற்ற பின்னர் குறைந்தது  “லேபர்”  வேலையாவது பெற்றுத் தாருங்கள் என்றே கேட்கின்றனர். அரசு ஆகக்குறைந்தது முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து அங்கு தொழிற்சாலைகளை உருவாக்கினால் அவர்கள் தொழில்களையாவது செய்வார்கள்.  


ஆனால், வெளிநாட்டு முதலீடுகளும் இல்லை, அரச தொழில்களும் இல்லை, தொழில் செய்வதற்கான சூழ்நிலைகளும் இல்லை, அதற்கான கொள்கைகளும் இல்லை, ஆகக்குறைந்தது அவர்களுக்கு கடன்களை கொடுத்து சுயதொழிலை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பு வசதிகளும் இல்லை.  


தந்தையை இழந்து ; தாயை இழந்து, யுத்தத்திலே பல்வேறுபட்ட துன்பங்களை சுமந்து மிகுந்த வறிய நிலையிலே வாடுகின்ற அந்த இளைஞர்களால் என்ன செய்ய முடியும்? ஆகவே, தயவு செய்து இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்தி தெளிவான தீர்மானத்தை எடுக்க வேண்டும். 


இது ஓர் பாரதூரமான பிரச்சினை. அவர்கள் அமைதியான முறையிலேயே ஆர்ப்பாட்டத்தை செய்கிறார்கள். மாறாக, வீதிக்கு வந்து வேறுவகையில் தங்களது போராட்டங்களை முன்னெடுத்திருந்தால்  நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டி வந்திருக்கும். நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு இந்தப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று எங்கள் மீதும் விமர்சனம் முன்வைக்கின்றனர். அவர்கள் எங்கள் மீது சுமத்தும் விமர்சனங்கள் - குற்றச்சாட்டுக்கள்  நியாயமானவையாகும். அதனை நாங்கள் பிழை என்று கூறமாட்டோம். 


இந்த விடயம் தொடர்பில் நாங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினோம். கடந்த வாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டமொன்றின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பேசினோம். ஆனால், எந்தவிதமான தீர்வும் இதுவரைக் கிடைக்கவில்லை. ஆகக்குறைந்தது ஒரு உறுதிமொழியாவது வழங்கப்படவில்லை. இது தொடர்பில் ஒரு வார்த்தைக் கூட இந்த அரசு இன்னும் பேசவில்லை. 


எனவே, தொழில்களை வழங்குவதற்கு அவசர திட்டங்களை வகுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி தொழிற்சாலை அமைத்து தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படுமாயின் தொழில் கேட்டு எமது இளைஞர்கள் போராட வேண்டி தேவை ஏற்படமாட்டாது – என்றார்.