May 11

சம்பியன்ஸ் கிண்ணத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும்

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத் தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

இந்தத் தொடர் இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன. இரு அணிகளும் 4ஆம் திகதி பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டிக்கு இன்னும் 25 நாட்கள் உள்ள நிலையில் இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர்  சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘சம்பியன்ஸ் கிண்ணத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும். 8 முதல் 10 வருடங்களில் இரு அணிகளுக்கு இடையிலான தரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. இதுவே இந்தியா ஐ.சி.சி. நடத்தும் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தியா மீண்டும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தும் என்று நம்புகிறேன்” என்றார்.