May 11

லஞ்சம் ஊழலில் தமிழக அரசு கவனம்: ஸ்டாலின்

மக்களை பற்றி கவலைப்படாமல், ஊழல் செய்வது, லஞ்சம் வாங்குவதில் மட்டுமே தமிழக அரசின் கவனம் உள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 


கொளத்தூரில் குளம் தூர்வாரிய பின்னர் அவர் அளித்த பேட்டி: எனது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் பல இடங்களில் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி வருகின்றனர். எனது தொகுதியில் உள்ள கொளத்தூர் முத்துமாரியம்மன் கோயில் குளத்தை தூர்வார வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால், இதனை ஏற்கவில்லை. தற்போது குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அனுமதி பெற்று பணி துவங்கியுள்ளது.


தமிழகத்தில் அதிமுக ஆட்சி குடிநீர் பிரச்னை பற்றி கவலையில்லை. குடிநீர் தட்டுப்பாடு பற்றி கவலைப்படவில்லை. கடந்த திமுக ஆட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, பல கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.


தற்போதைய ஆளுங்கட்சி எந்த கூட்டு குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. நிறைவேற்றவும் முயற்சி செய்யவில்லை. எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் தாகத்தை தீர்க்க திமுக உதவி செய்கிறது.


ஆளுங்கட்சி மக்களை பற்றி கவலைப்படவில்லை. எப்படி இரு அணிகளை சேர்ப்பது, ஆட்சியை காப்பாற்றி கொள்வது, எப்படி கொள்ளையடிப்பது, எப்படி லஞ்சம் வாங்குவதில் என்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறது.


அமைச்சர்கள் மீது கவர்னரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் பா.ஜ.,வை எப்படி கருணாநிதி வைரவிழாவிற்கு அழைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்
.