Mar 07

திருமலையில் வழிபாட்டிடங்கள் அபகரிப்பு

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள், ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருவதோடு தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் அவை அபகரிக்கப்படுவதாகவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிலையியற்கட்டளை 23இன் கீழ் இரண்டில் விசேட கேள்வியைத் தொடுத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தொல் பொருள் திணைக்களத்தினூடான இவ்வாறான செயற்பாடுகளின் முன்பாக எமது மக்கள் அந்த நம்பிக்கையை இழந்த நிலைக்கு ஆளாக்கப்படுவதற்கு இந்த அரசு காரணமாக அமைந்துவிடக் கூடாது எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறான செயற்பாடுகள் திருகோணமலையில் மட்டுமல்ல, வடக்குகிழக்கு மாகாணங்களில் பரவலாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக அன்றாடம் வெளிவருகின்ற ஊடகச் செய்திகள் உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

எனவே, இந்த விடயம் தொடர்பில் ஒரு தெளிவான நெறிமுறையை அமைப்பதற்கு தொல் பொருள் திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள் முன்வர வேண்டியது அத்தியவசியமாகும்

1957ஆம் ஆண்டு முதல் உப்புவெளி கிராமோதய சபையால் பராமரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில், இந்த அரசினால் உப்புவெளி பிரதேச சபையிடம் ஒப்படைப்பதாக வாக்குறுதி வழங்கப்பட்ட கன்னியா வெந்நீரூற்று பிரதேசம் எப்போது ஒப்படைக்கப்படும் என்பதை அறியத் தரவேண்டும்.

இந்தப் பகுதியை அண்டியதாக அமையப் பெற்றிருந்த பழைவாய்ந்த பிள்ளையார் கோவில் இருந்த பகுதிக்குரிய காணியின் உரிமங்கள் சட்டரீதியாக தனியார் வசமுள்ள நிலையில், இக் கோவிலை மீள அமைப்பதில் வேறு ஏதேனும் தடைகள் உள்ளனவா?

1938ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்டு, 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட செம்பீஸ்வரர் ஆலய புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கென புனர்வாழ்வு அதிகார சபை நிதி ஒதுக்கீட்டினையும் மேற்கொண்டுள்ள நிலையில், தொல் பொருள் திணைக்கள அதிகாரிகளின் தலையீடுகள் காரணமாக அதன் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அங்கு இந்து மத பக்தர்கள் மத வழிபாடுகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கும் தடைகள் இருப்பின் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றார்.