Dec 31

முற்றவெளியில் பற்றிய இனவாத நெருப்பு - ந.மதியழகன்.

யாழ்ப்பாணம் முற்றவெளியில்  பிக்குவின் சிதைக்கு வைத்த நெருப்பு, யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு வைக்கப்பட்ட தீக்கு நிகராகத் தமிழர் நெஞ்சில் பற்றி எரிவதைத் தணிக்க முடியவில்லை. நெஞ்சு பொறுக்க முடியாத வேதனையாகவே இது உள்ளது. இதற்கு நியாயமான அச்சங்களும் உதாரணங்களும் நிறையவே உள்ளன.

யாழ்ப்பாணத்தில் பிறக்காத, வசிக்காத மத தலைவரை வெற்றுக் கௌரவத்திற்காக ஆயுத முனையில் இராணுவப் பிரசன்னத்துடன் தகனம் செய்யும் நிலைக்கு புத்தன் வழி வந்தவரின் இறுதி நிகழ்வு அமைந்தமை புத்தனுக்கு ஏற்பட்ட இழுக்கே. ஆனால் தமிழர்களின் ஆதங்கமும் எதிர்ப்பும் கிளம்ப முக்கிய காரணம் ஓர் ஆத்மாவின் இறுதி அமைதியைக் குலைக்கும் நோக்கமல்ல. மாறாக சிதை எரிந்த இடத்தில் ஆக்கிரமிப்பின் சின்னம் எழுந்து விடக்கூடாது என்பதே.  இந்த ஆதங்கமே பிக்குவின் உடல் தகனத்துக்கு எதிராகத் தமிழர்கள் குரல் கொடுக்கக் காரணமாக அமைந்தது. இந்த நியாயமான ஆதங்கத்திற்கு வித்திட்டவர்களும் புத்தனின் பரம்பரையினரே. வடக்கு கிழக்கை இவர்களின் அந்த வகையான ஆக்கிரமிப்பு ஒன்றும் தமிழருக்குப் புதியவை அல்ல. மாறாக இந்த எதிர்ப்பை தென்னிலங்கை இனத்திற்கான எதிர்ப்பாக பார்ப்பதே வேடிக்கை.

முற்றவெளியில் சாம்பரான துறவி மேக ஜதுர ஞானரட்ன தேரர் 24 ஆண்டுகள் யாழ். மண்ணிலேயே வாழ்ந்திருந்தார். இந்நிலையிலேயே அவரின் உடலம் யாழ்ப்பாணத்தில் தகனம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணக் குடாநாடு இருந்த சமயமும் மறைந்த ஞானரட்ன தேரர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருந்தார். விடுதலைப் புலிகளே ஏற்ற மதகுருவே இந்த மண்ணில் தகனம் செய்யப்பட்டார் என்பதே அது. அது உண்மையே ஆனபோதும் தகனத்தின் பின்னரான விளைவுகள் குறித்தே தமிழ் மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2009 மே 18 அழிவின் பின்னர் - நிர்வாண நிலையில் தமிழினமே நிற்கிறது என்பதாக ஒப்பீடு செய்யப்படுகின்றது. இப்படியான நிலையில் இன, மதத் திணிப்பை வலிந்து ஏற்படுத்தும் இந்த முயற்சி மீண்டும் ஒரு ஆயுத மோதலையா? அரசு விரும்புகிறது எனக் கேட்க வைக்கும் வகையறாவில் உள்ளது. பிக்குவின் தகனத்துக்கு தடை கோரி போடப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியான பின் கருத்துரைத்த சட்டத்தரணி மணிவண்ணன் 'நாட்டில் நல்லாட்சி என்று எதுவுமே இல்லை' எனக் கூறுமளவுக்கு நிலைமை இருக்கிறது. இங்கே அவர் 'எதுவுமே' எனக் குறிப்பிட்டது. நீதியையும் சேர்த்துத்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது இந்த நாட்டில் நீதியும் பெரும்பான்மை பக்கம் என்பதைத் தாண்டி இராணுவத்தின் செயற்பாடுகளில் தலையிடாது - கட்டுப்படுத்தாது என்பதையே உணர்த்துகிறது.

மறுமுனையில் பொது இடத்தில் - முற்றவெளியில் இடம்பெறும் உடல் தகனம் என்பது யாழ்ப்பாணத்தில் இதுவே முதல் தடவையா? என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது. அதற்கு விடையாக நீண்ட பட்டியலே கிட்டியது. அதாவது தமிழ் மக்களின் மனதில் என்றுமே அசைக்க முடியாத பெரும் தலைவர் மேதகு வே.பிரபாகரன் முதன் முதலாக சுட்டுக் கொன்ற  இனத் துரோகியான அல்பிரட் துரையப்பாவின் தகனத்தோடு ஆரம்பமானதே யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் தகனக் கிரியைகளுக்கான பட்டியல். 1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி பொன்னாலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அல்பிரட் துரையப்பாவின் உடல் தகனம் இன்றைய துரையப்பா விளையாட்டு அரங்கிலேயே இடம்பெற்றது.

இந்த வரிசையில் 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி காலமான தந்தை செல்வாவின் உடல் அவரது நினைவுத் தூபி  அமைந்துள்ள இடத்திலேயே இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அ.அமிர்தலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் 1989 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கொழும்பில் கொல்லப்பட்டனர். இவர்களின் தகனக் கிரியைகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்திலேயே இடம்பெற்றது. இதேபோன்றே தமிழ் தொழிற்சங்கவாதிகளில் ஒருவரான கே.சி. நித்தியானந்தனின் உடலும் இதே முற்றவெளியிலேயே தகனம் செய்யப்பட்டது.

இந்த வரிசையில் போரில் வீரச்சாவடைந்த சில மாவீரர்களின் தகனங்களும் இங்கேயே இடம்பெற்றன. இதில் நாவாந்துறை இளைஞனும் உள்ளடக்கம். அதாவது ஏதோ ஒரு வகையில் தலைவர்களாக இருந்தவர்களின் உடல்கள் பொது இடத்தில் தகனம் செய்யும் மரபை பின்பற்றிய வரலாறும் கானப்படுகின்றது. இந்த வரிசையிலேயே 1977 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி மரணமடைந்த சட்டமேதையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் உடலும் பருத்தித்துறை கடற்கரையில் தகனம் செய்யப்பட்டதாகவே வரலாறு உள்ளது.

ஆகவே இங்கு எழுந்த பிரச்சினை பொது இடத்தில் உடல் தகனம் என்பதல்ல. பிக்குவின் தகனத்தின் பின்னர் இன, மத ஆக்கிரமிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற பயமே. ஒன்றுமே இல்லாமலே இட்டுக் கதைகளை வரலாறாக்கும் வல்லமை படைத்தவர்கள் இந்தப் பிக்குகள். இதற்கு சான்றாதாரமாக இன்றளவும் விளங்குவது இலங்கை சரித்திரத்தைக் கூறும் மகாவம்சம். இதைப் போல இல்லாத வரலாறை உருவாக்கி அதைப் பாடப் புத்தகங்களிலும் சேர்த்து சிவபூமி என சிறப்புப் பெற்ற யாழ்ப்பாணத்தை பௌத்த பூமியாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சமே மேலோங்கி நின்றது - நிற்கிறது.

இதேவேளை இங்கு இன்னொரு விடயத்தையும் நோக்க வேண்டியது அவசியமாகிறது. பிக்குவின் உடல் தகனத்துக்கு திணைக்களம், மாவட்ட மட்ட அதிகாரங்களிடம் அனுமதி பெறப்படவில்லை. மாறாக மத்திய அரசின் அமைச்சிடமே இதற்கான அனுமதிகள் பெறப்பட்டிருந்தன. இத்தகைய அனுமதிகள் எதிர்காலம் நோக்கிய சிந்தனைகளைத் தூண்டிவிட்டிருக்கிறது.

உண்மையில் இங்கே இந்தச் செயலைத் தடுக்கும் அதிகாரம் கொண்ட கட்டமைப்பு எம்மிடத்தே உண்டு. அந்த அமைப்பு உரிய நேரத்திற்கு உரிய வேகத்தில் செயற்படாமையே இந்த நிகழ்வு இடம்பெறுவதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது. அதாவது குறித்த நிகழ்வினை தடுக்கும் வல்லமை கொண்ட நிர்வாக மையம் மாநகரசபை என்றவகையில் மாநகரசபையே நீதிமன்றை நாடியிருக்க வேண்டும். ஆனால் குறித்த மாநகர சபையும் வெள்ளிக்கிழமை காலை வரையில் உறக்கத்திலேயே இருந்து விட்டது.

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சிலர் வடக்கு மாகாண முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு இதனை உடனடியாக தடுக்கும வழிமுறையென உரைத்தபோதே முதலமைச்சர் விழித்துக்கொண்டார். இருப்பினும் முதலமைச்சரோ மலேசியப் பிரதமரின் சந்திப்பு நிறைவு பெற்ற தினத்தில் இருந்து கொழும்பிலேயே தங்கி விட்டதனால் உடனடியாக தனது பிரத்தியேகச் செயலாளர் இராசதுரை மற்றும் அமைச்சின் செயலாளர் ஊடாக மாநகர ஆணையாளருக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தலை வழங்கினார்.

இந்த அறிவுறுத்தலுக்கு அமைய மாநகர ஆணையாளர் சுமார் 11 மணியளவில் அவசர அவசரமாக ஓர் கடித மூலம் குறித்த நிகழ்வைத் தடை செய்யுமாறு பொலிஸாருக்கு எழுத்தில் கடிதம் ஒன்றை சமர்ப்பித்திருந்தார். அத்தோடு அந்த அலுவல் முற்றுப்பெற்றது. இதேநேரம் தனி இருவரால் குறித்த நிகழ்வு பொது அமைதிக்கு குந்தகமாயும் சுற்றுச் சூழலிற்கு தீங்காயும் அமையக்கூடிய இந்த நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரிய வழக்கில் 12 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். இதில் 5பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டனர். அதில் மாநகர ஆணையாளரும் ஒருவர் . ஆனால் அவர் வழக்கு முடியும்வரை நீதிமன்றிற்கு வரவே இல்லை என்கின்றனர் சட்டத்தரணிகள்.

இதேநேரம் குறித்த நிகழ்வை இராணுவம் ஏற்பாடு செய்தமையால் அதனை தடுத்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என பொலிஸார் மன்றில் தெரிவித்த விடயத்தை வெறுமனே பேச்சுடன் நிறுத்தி விடக்கூடியதல்ல. இது சர்வதேச ரீதியில் கவனத்தைப் பெறுமளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது இந்த நாட்டில் இராணுவம் எதைச் செய்தாலும் அதை சட்ட ரீதியாகக்கூட தடுக்கக்கூடாது என்பதை மன்றில் பொலிஸார் சொன்ன செய்தி, எனவே இங்கே குந்தியுள்ள ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கு மக்களிற்கு உதவவும் வைத்தியசாலைக்கு இரத்தம் வழங்கவும் அனர்த்த்தின்போது மீட்புப் பணிகளுக்குமே என இன்னமும் ஆளுநர் உள்ளிட்டோர் கூறுவதும் புளுடா என்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.