May 10

71நாட்களாக தொடரும் கேப்பாபுலவு நில மீட்பு போராட்டம்

கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை  விடுவித்து சொந்த நிலத்தில்  தாம் வாழ அனுமதிக்க வேண்டுமெனக்கோரி இன்றுடன் 71 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச்  மாதம்  முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் 71 நாட்களாக போராடிவரும் மக்கள் தாம் இவ்வாறு தொடர்ந்து இந்த வீதியில் இருப்பதை இந்த அரசு கண்டும் காணாமலும் இருந்துவருகின்றமை கவலையளிக்கின்றதோடு ஏதோ அந்நியநாட்டு பிரஜைகள் போல் எம்மை நடத்திக்கொண்டு எமது சொந்த கேப்பாபுலவு கிராமத்தில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள இராணுவம் தமது அன்றாட செயற்பாடுகளை சரிவர செய்துவருகின்றனர்.

எமது நிலங்களில் உள்ள சுகபோகங்களை அனுபவிக்கின்றனர்.வெசாக் பண்டிகையை எமதுக்கிராமத்தில் உள்ள விகாரையில் விழா எடுத்து கொண்டாடுகின்றனர்.ஆனால் எமது கிராமத்தில் உள்ள எமது புராதன குலதெய்வங்களான ஆலயங்களில் நாம் வழிபடவோ திருவிழா செய்யவோ அனுமதி மறுக்கின்றனர்.

இதுவா புத்த மத தர்மம் ?அனைத்து மக்களையும் சமமாகவும் சமாதானமாகவும் நடத்துவதே அறத்தை வலியுறுத்தும் புத்தபிரானின் வழி ஆனால் எமது மண்ணில் நிலைகொண்டுள்ள இராணுவமோ அதற்க்கு புறம்பாகவே நடக்கின்றது.நாம் இன்று எத்தனை நாட்களாக வீதியில் கிடக்கின்றோம்.

இத்தனை நாட்களுக்கும் இவர்களுக்கு இறக்கம் என்பதே வரவில்லையா என்று கண்ணீர்மல்க போராடிவரும் கேப்பாபுலவு பூரர்வீக கிராம மக்கள் தெரிவித்தனர்.