May 10

ரூ.15,000 விலையில் விற்பனைக்கு வரும் ஆப்பிள் ஐபோன்?

ஆப்பிள் ஐபோன் வாங்க நீண்ட நாள் ஆசையா? விலை காரணமாக வாங்காமல் இருந்தவர்களுக்கு ஓர் நல்ல செய்தி. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆன்லைன் விற்பனையை ஊக்குவிக்க இருப்பதாகவும், இதற்கென ஐபோன்களை சலுகை விலையில் விற்பனை செய்யும் என்றும் கூறப்படுகின்றது. 

ஸ்மார்ட்போன் சந்தை வல்லுநர்களின் படி ஆப்பிள் நிறுவனம் தனது நான்கு ஆண்டுகள் பழைய ஐபோன் 5S மாடலை ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் ஐபோன் 5S ரூ.15,000 என்ற விலையில் விற்பனை செய்யப்படலாம். இந்தியாவில் ஐபோன் 5S தற்போதைய விலை ரூ.18,000 முதல் துவங்குகிறது.

ஆப்பிள் ஐபோன் SE ஆஃப்லைன் முறையில் சுமார் 20,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஏற்கனவே பயன்படுத்திய ஐபோன்களை இந்தியாவில் விற்பனை செய்யும் முடிவு பலன் அளிக்காத நிலையில் ஐபோன்களை ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வது விற்பனையை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இத்துடன் ரூ.15,000 என்ற விலையில் ஐபோன்களை விற்பனை செய்வதால் இவை சியோமி, லெனோவோ, மோட்டோரோலா, ஒப்போ, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பலத்த போட்டியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதன் காரணமாக ஆப்பிளின் இந்த முடிவு அந்நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகத்தை இந்தியாவில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஏற்கனவே இந்தியாவில் விற்பனையாகும் ஐபோன்களில் 50 முதல் 55 சதவிகிதம் ஆன்லைன் மூலம் விற்பனையாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.