May 10

ஹமில்டன் வன்முறை: மூவருக்கு பொலிஸார் வலைவீச்சு

ஹமில்டனில் வன்முறையான முறையில் வீடொன்றை ஆக்கிரமிக்க முயன்ற சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில் ஆயுதங்களுடன் குறித்த வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஐந்து பேர், வீட்டிற்குள் இருந்தவர்களை தாக்க முயன்றுள்ளனர். இதன்போது வீட்டிலிருந்த ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியதுடன் மூவர் காயமடைந்தனர்.

இச்சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரால் இருவர் கைதுசெய்யப்பட்டதோடு, மூவர் தப்பியோடியுள்ளனர். சுடப்பட்ட ஆண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாக்குதல் நடத்த உபயோகிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் எதனையும் வெளியிடாத பொலிஸார், தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.