May 10

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத்?

குஜராத் லயன்ஸ் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது.

குஜராத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது. பேட்ஸ்மேன்கள் நல்ல நிலையில் இருந்தாலும் குஜராத் அணியின் பந்து வீச்சு சற்று பலவீனமாகவே உள்ளது.

அந்த அணியின் வெற்றிகரமான பந்து வீச்சாளராக விளங்கிய ஆண்ட்ரூ டை, அதிரடி ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம் ஆகியோர் காயம் காரணமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரவீந்திர ஜடேஜா ஜொலிக்காததும் அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி, மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணிக்கு லேசாக இருந்த அடுத்த சுற்று வாய்ப்பு பொசுங்கி போனது.

டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 66 ரன்னில் சுருண்டு வலுவான மும்பை அணியிடம் மண்டியிட்டது.இரண்டு அணிகளும் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்டதால் இந்த ஆட்டத்தை சம்பிரதாய மோதல் எனலாம்.

இருப்பினும் புள்ளி பட்டியலில் ஏற்றம் கண்டு கவுரவம் தேடிக்கொள்ள இரு அணிகளும் ஆர்வம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை சாய்த்து இருந்தது.

அந்த ஆட்டத்தில் ரிஷாப் பான்ட் (97 ரன்கள்), சஞ்சு சாம்சன் (61 ரன்கள்) அதிரடியாக ஆடி டெல்லி அணிக்கு எளிதான வெற்றியை தேடிக்கொடுத்தனர். முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க குஜராத் அணி முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.