Dec 24

பங்காளிக் கட்சிகள் இனியும் சம்பந்தனை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியுமா - யதீந்திரா

ஆசனப்பங்கீடு தொடர்பான இழுபறிகள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பலவீனத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும். கூட்டமைப்புக்குள் தமிழரசு கட்சியின் ஆதிக்கம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல ஆனால் அந்த ஆதிக்கம் எந்தளவிற்கு நீளக்கூடியது என்பது தற்போதுதான் தெட்டத் தெளிவாகியிருக்கிறது. உள்ளுராட்சித் தேர்தலில் தமது கட்சிக்கான ஒதுக்கீடுகள் இவ்வாறுதான் அமைந்திருக்க வேண்டுமென்று பங்காளிக் கட்சிகளான டெலோவும், புளொட்டும் வலியுறுத்தியிருந்தன. அது பற்றி பேசலாம் என்று தமிழரசு கட்சியும் உறுதியளித்திருந்தது. இது தொடர்பில் கொழும்பில் கூடிய கூட்டமைப்பு கட்சிகளின் தலைவர்கள் ஏகமனதாக தங்களுக்குள் உடன்பாடும் கண்டிருந்தனர். ஆனால் அந்த உடன்பாட்டிற்கு பின்னரும் கூட, தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண தலைமைத்துவம் பங்காளிக் கட்சிகளுக்கான இடங்களை முழுமையாக வழங்கவில்லை. மீண்டும் ஏமாற்றியது. இதனால் மீண்டும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மாட்டின் வீதியில் அமைந்திருக்கும் மவை சேனாதியின் வீட்டில் தவம் கிடக்க நேர்ந்தது. ஆனாலும் மாவையும் மனமிறங்கி அருள்பாலிக்கவில்லை.

உள்ளுராட்சித் தேர்லில் தங்களது கட்சிக்கு எந்தெந்த சபைகள் வழக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் முதல் முதலாக டெலோவே தமிழரசு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. டெலோவின் உயர்மட்ட தலைவர்கள் சிலரிடம் தாங்களே தமிழரசு கட்சிக்கு அடுத்த நிலையிலுள்ள கட்சி என்னும் எண்ணம் நிலவுகிறது. இதனை சுமந்திரன் நகைச்சுவைக்குரிய ஒன்றாகக் கருதக் கூடும். இதனடிப்படையிலேயே வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு சபைகளை தங்களுக்கு வழங்குமாறு டெலோ கோரிக்கை விடுத்திருந்தது. திருகோணமலையில் கூட ஒரு சபையை கோரியிருந்தது ஆனால் இதிலுள்ள நகைச்சுவை என்னவென்றால் திருகோணமலையில் சபை ஒன்றை கோரிய டெலோவிற்கு ஆகக் குறைந்தது திருகோணமலை நகரசபையில் ஒரு வட்டாரத்தைக் கூட சம்பந்தன் வழங்கவில்லை. அடைக்கலநாதன் தனக்கு அடைக்கலமளிப்பார் என்று மலைபோல் நம்பியிருந்த திருகோணமலையைச் சேர்ந்த டொலோவின் மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் தற்போது உயதசூரியனின் கீழ் அடைக்கலம் தேடியிருக்கிறார்.

டெலோவின் நிலைமை இதுவென்றால் புளொட்டின் நிலைமையோ அதனைவிடவும் கவலைக்கிடமானது. புளொட் (டி.பி.எல்.எப்) ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சில சபைகளை கோரியிருந்தது அதேபோன்று ஏனைய மாவட்டங்களில் சில வட்டாரங்களையும் கோரியிருந்தது. ஆனால் புளொட் கோரிய இடங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. புளொட் இயக்கத்தின் தலைவர் சித்தார்த்தன் தனது பாராளுமன்ற கடித்தலையில் பெயர் குறிப்பிட்டு, திருகோணமலை நகரசபை மற்றும் பிரதேச சபையொன்றிற்கு தலா ஒருவருக்கு இடமளிக்குமாறு கோரியிருந்தார். இதடினப்படையில் பெயர் குறிப்பிடப்பட்ட இளைஞர் ஒருவருக்கு சம்பந்தனின் இல்லத்திலிருந்து அழைப்பும் வந்தது. அந்த இளைஞர் இரவு பத்து மணி வரை சம்பந்தனின் இலத்தில் காத்துக் கிடந்தார். இறுதியில் உங்களுக்கு வட்டாரம் இல்லை வேண்டுமானால் விகிதாசாரத்தில் தருகிறோம் என்று பதிலளிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த அந்த இளைஞர் எனக்கு வட்டாரம் ஏன் தரவில்லை என்று கேட்டிருக்கிறார். இதற்கு சம்பந்தனின் இல்லத்திலிருந்து வழங்கப்பட்ட பதில் உங்களுக்கு அரசியல் தெரியாது என்று எண்ணுகின்றோம். புளொட்டுக்கு இங்கு ஒன்றுமில்லை. ஏதோ இதனையாவது தரலாம் என்று எண்ணினோம். அதன் பிறகு அந்த இளைஞர் அவமானத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எந்தளவிற்கு அரசியல்ரீதீயாக கையறு நிலையிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் நோக்கிலேயே இந்த சம்பவங்கள் இங்கு எடுத்தாளப்படுகின்றன.

ஆசனங்கள் பெரிதல்ல. இது சாதாரண விடயம். நாங்கள் ஒரு முடிவு வரும்வரைக்கும் சம்பந்தனுக்கு ஒத்துழைப்பு வழங்கத்தான் வேண்டும் என்றவாறு சிலர் வாதிடக் கூடும். குறிப்பாக புளொட் தலைவர் சித்தார்த்தன் சம்பந்தன் அண்ணன் என்று அழுத்திக் குறிப்பிட்டு, அவரை நியாயப்படுத்துவதுண்டு. ஆனால் அவ்வாறு சம்பந்தனை நியாயப்படுத்திக் கொண்டிருந்த சித்தார்தனுக்கு கூட சம்பந்தன் உண்மையாக நடந்துகொள்ளவில்லை. ஆசனங்கள் தொடர்பான பிரச்சினை சாதாரணமான விடயம் என்றால் தேர்தல்களை தவிர்க்க வேண்டும். அவ்வாறில்லாது தேர்தல்களில் போட்டியிட்டுக் கொண்டு ஆசனப் பங்கீடு என்பதை சாதாரண ஒரு விடயமாக காண்பிக்க முற்படுவது மக்களை மடையர்களாக்கும் செயல். உண்மையில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை தமிழரசு கட்சியின் தலைமை மட்டுமன்றி அதன் அடிமட்ட உறுப்பினர்கள் கூட இழக்காரமாகவே பார்க்கின்றனர். எங்களுடன் இருக்கும் வரைதான் இவர்களுக்கு எதிர்காலம் என்னும் பார்வையே தமிழரசு கட்சியிடம் இருக்கிறது. இதன் விளைவே உயர்மட்டத்தில் பேசி இணக்கம் காணப்பட்ட பின்னரும் கூட வடக்கில் இரண்டாம் மட்டத்திலுள்ள தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடங்கள் வழங்கப்படுவதை ஏற்க மறுக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் நடவடிக்கை தமிழரசு கட்சியினர் டெலோ மற்றும் புளொட்டை எவ்வாறு நடத்த விரும்புகின்றனர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கிளிநொச்சியிலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்களில் டெலோ மற்றும் புளொட் ஆகியவற்றுக்கு எந்தவொரு இடமும் வழங்கப்படவில்லை. வேட்புமனுக்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பங்காளிக் கட்சிகள் வருவதற்கு முன்னரே சிறிதரன் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டார். சிறிதரனால் எவ்வாறு இந்தளவிற்கு தற்துனிவுடன் செயலாற்ற முடிகிறது? ஏன் சம்பந்தன் அண்ணன் மௌனமாக இருக்கிறார்? ஒற்றுமையில் அக்கறையுள்ள சம்பந்தன் இவ்வாறான செயல்களை தடுத்தல்லவா இருக்க வேண்டும் - ஏன் அவர் அவ்வாறு செய்யவில்லை. உண்மையில் தமிழரசு கட்சிக்குள், சம்பந்தன் தொடக்கம் ஒரு சாதாரண தமிழரசு கட்சி உறுப்பினர் வரையில் எவருமே, டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளை மதிப்பதில்லை. இதனைத்தானே மேற்படி சம்பவம் உறுதிப்படுத்துகின்றது. அவர்களுக்கு எங்கிருந்து இந்தளவு துனிவு வருகிறது? டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் தனிவழில் செல்லும் துனிவற்றவை என்னும் எண்ணத்திலிருந்தே அவ்வாறான துனிவு வருகிறது.

ஆரம்பத்தில் டெலோ ஒரு துருப்புச் சீட்டைப் போட்டுப் பார்த்தது. நாங்கள் வெளியேற நேரிடும் என்றவாறு எச்சரிக்கையும் விட்டனர் ஆனால் தமிழரசு கட்சியோ எதற்கும் வளைந்துகொடுக்கவில்லை. அவர்கள் ஒரு போதும் வளைந்து கொடுக்கப் போவதில்லை என்பதைத்தான் அவர்களது செயற்பாடுகள் தெளிவாக நிரூபித்திருக்கின்றன. உண்மையில் டெலோ பிரிந்துசெல்ல முற்படவில்லை மாறாக தமிழரசு கட்சியின் மீது அழுத்தம் ஒன்றையே போட முற்பட்டது ஆனால் தமிழரசு கட்சியோ எதற்கும் வழைந்துகொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் நீங்கள் தனியாக போவதென்றால் போங்கள் தேர்தல் முடிந்ததும் நாங்கள் சேர்ந்து இயங்கலாம் என்றவாறு கூட சுமந்திரன் கூறியிருக்கிறார். அதனுடன் டெலோ அடங்கிவிட்டது. ஆசனப்பங்கீடு தொடர்பான முரண்பாடுகளின் போது ஒரு விடயத்தை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சம்பந்தன் மட்டுமே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த சின்ன விடயங்களுக்காக நாங்கள் பிரிந்துசெல்லக் கூடாது என்றவாறு கூறிக்கொண்டிருந்தார் ஆனால் மாவை சேனாதியோ அல்லது சுமந்திரனோ போவதென்றால் போங்கள் என்னும் மனோநிலையில்தான் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். சம்பந்தன் ஒற்றுமை தொடர்பில் பேசியது கூட ஒற்றுமையின் மீதுள்ள பற்றினால் அல்ல மாறாக தனது தலைவர் பதவியை கருத்தில் கொண்டே அவர் அவ்வாறு பேசினார். கூட்டமைப்பு என்பது பெயரளவிலாவது இருந்தால்தான் தமிழ் மக்களின் சார்பில் அவர் தலைவராக இருக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டுதான் சம்பந்தன் ஒற்றுமை தொடர்பில் அவ்வப்போது வகுப்பெடுப்பதுண்டு. உண்மையிலேயே சம்பந்தனுக்கு ஒற்றுமையில் அக்கறை இருந்திருப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரனோடு கூட பேசியிருப்பார். ஆனால் சம்பந்தனோ எதனையும் செய்யவில்லை என்பதற்கும் அப்பால் அடிக்கடி சம்பந்தன் அண்ணன் என்று உருக்கமாக கூறிவரும் சித்தார்த்தனைக் கூட சம்பந்தன் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

ஒரு உள்ளுராட்சி விவகாரத்தை சரியாக கையாள முடியாத சம்பந்தன் தமிழ் மக்களுக்கான உச்சபட்ச அரசியல் தீர்வை பெற்றும் தருவாரென்று இனியும் சித்தார்த்தன் கூறிக்கொண்டிருக்கப் போகின்றாரா? தேர்தலின் போது கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் வன்முறைகள் இடம்பெறுவதுண்டு ஆனால் ஒரு கட்சித் தலைவரின் வீட்டுக்கு முன்னால் அந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் இருவர் சண்டைபோட்ட சம்பவம் மாவைசேனாதியின் விட்டுக்கு முன்னால் மட்டுமே நடந்தேறியது. இதெல்லாம் ஏன்? இப்படியொரு கேள்வியை சம்பந்தனிடம் கேட்டால் ஒரு ஜனநயாக கட்சியென்றால் இதெல்லாம் சாதாரணம் என்பார். கூட்டமைப்புக்குள் முரண்பாடு நிலவுகிறதே என்னும் கேள்விக்கும் அவரிடம் இருக்கின்ற பதில், இதெல்லாம் சாதாரணம் என்பதே! ஆசனங்பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் ஏன் என்று கேட்டால் அதற்கும் பதில் இதெல்லாம் சாதாரணம் என்பதுதான். சம்பந்தனை பொறுத்தவரையில் எல்லாமே சாhதாரணம்தான். அரசியல் தீர்வு பற்றி கூறினார்களே, அதற்கு என்ன நடந்தது என்னும் கேள்விக்குக் கூட இறுதியில் சம்பந்தன் வழங்கப் போகும் ஆகச்சிறந்த பதில் இதெல்லாம் சாதாரண விடயம் என்பதான். நாங்கள் வருமென்று நம்பினோம் ஆனால் வரவில்லை அரசியலில் இதெல்லாம் சாதாரணம் எனலாம். இதுதான் சம்பந்தன் இறுதியில் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் பதில். உள்ளுராட்சி தேர்தலின் போது ஏற்பட்ட குத்து வெட்டுக்குள் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட் ஆகியவற்றுக்கு கூட்டமைப்புக்குள் தங்களின் இடம் என்ன என்பதை தெளிவாக காண்பித்திருக்கிறது. தங்களது எதிர்காலத்திற்காக தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அந்த கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.