Dec 20

கிராமப்புறங்களில் அதிவேக இணையம்! - நூறு மில்லியன்கள் செலவிடும் அரசு!

பிரான்சின் கிராமப்புறங்களில் அதிவேக இணைய சேவையினை வழங்கும் நடவடிக்கையில் அரசு ஈடுப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னதாக பல செய்திகள் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்சின் கிராமப்புறங்கள் உட்பட நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டுக்குள் அதிவேக இணையமும், 2022 ஆம் ஆண்டுக்குள் மிக அதிகமான உச்சவேக இணையமும் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கிருஸ்துமஸ் காலத்தில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் நடத்தவும் அரசு திட்டமிட்டது.

கடந்த ஜூலை மாதத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாடு முழுவதும் அதிவேக இணையம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். குறைந்தது ஒரு வினாடிக்கு 8 mb எனும் வேகத்தில் இணையம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆறு மாதங்களின் பின்னர் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு தரப்பில் 100 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் 7.5 மில்லியன் மக்களிடம் அதிவேக இணையம் இல்லை என கணக்கெடுப்பு ஒன்று தெரிவித்துள்ளது. தவிர 340 சிறு நகரங்களில் தொலைபேசி வலையமைப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.