Dec 19

தமிழில் பேசி ஆங்கிலேய நீதிபதியை திணறடித்தவர் ஆறுமுக நாவலர்

“தமிழும் சைவமும் என் இரண்டு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன்கொள்வதே என் கடன்; அவை வாழப் பணிபுரிவதே என் வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லி அதன்வழி வாழ்ந்தவர் ஆறுமுக நாவலர். அவருடைய பிறந்த தினம் நேற்று ஆகும். தமிழும் சைவமும் அழியாமல் காக்கவென 18.12.1882 இல் ஆறுமுகநாவலர் பெருமான் அவதரித்தார்.

ஓலைச்சுவடியில் இருந்த தமிழ், கறையான்களாலும் செல்களாலும் அழிவதைக் கண்டு மனம் வருத்தப்பட்ட ஆறுமுக நாவலர், அதைப் பதிப்பிக்கும் பணியில் களமிறங்கினார். ஓலைச்சுவடியில் இருந்த தமிழை அப்படியே பதிப்பிக்காமல், அதனைப் பல பிரதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதன் பிறகே பதிப்பித்தார். அவர் பதிப்பித்த நூல்களில் அனைத்தும் அதாவது, பக்க எண்கள் கூடத் தமிழ் எண்களாகவே இருக்கும். அதுபோல, பதிப்பித்த ஆண்டும் மாதமும் தமிழிலேயே இருக்கும். இப்படி அவர் பதிப்பித்த நூல்கள் 46. எழுதிய நூல்கள் 24.

தமிழுக்காகத் தம் இறுதிமூச்சுவரை வாழ்ந்த ஆறுமுக நாவலர், “கல்வியை விரும்பும் ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியம்” என்று வலியுறுத்தினார். இதுகுறித்து ‘புத்தகம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், “கல்வியை விரும்பிக் கற்கும் மாணவர்களுக்கும், கல்வியிலே நன்கு தேர்ச்சியடைந்த ஆசிரியர்களுக்கும், இனி கற்க முயல்பவர்களுமாகிய எல்​ேலாருக்கும் புத்தகங்கள் இன்றியமையாதவை. புத்தகங்கள் இன்றிக் கற்கப் புகுவோர் கோலின்றி நடக்கக் கருதிய குருடர்போல் ஆவர்.

யாதாயினும் ஒரு தொழிலைச் செய்பவனுக்கு அதனைச் செய்வதற்குரிய ஆயுதம் இன்றியமையாததுபோல, கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதனைக் கற்றலுக்குரிய புத்தகம் இன்றியமையாததேயாகும். ஆதலால், கல்வியை விரும்பிக் கற்கும் மாணவர்கள் புத்தகங்களைச் சம்பாதித்து, அவற்றைக் கிழிக்காமலும் அழுக்குப் படியாமலும், கெட்டுப் போகாமலும் பாதுகாத்து வைத்துப் படித்தல் வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது அன்றைய காலத்திலேயே நன்கு ஆங்கிலப் புலமை பெற்றிருந்த ஆறுமுக நாவலர், ஒருமுறை சென்னைக் கடற்கரையில் நடந்து சென்ற போது, அருகிலிருந்த குடிசையில் தீப்பிடித்து விட்டது.

இந்த வழக்குச் சம்பந்தமாக சாட்சியம் அளிக்க வேண்டி தன் சீடர்களுடன் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார். அங்கு நீதிபதியிடம், தன் தரப்பு விஷயங்களை ஆறுமுக நாவலர் ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பித்தார். இவர் ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு பொறாமைப்பட்ட அந்த ஆங்கிலேய நீதிபதி ஆறுமுக நாவலரிடம், “நீங்கள் தமிழிலேயே சொல்லுங்கள்; அதை நீதிமன்ற அதிகாரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவார்” என்று உத்தரவிட்டார்.

ஆறுமுக நாவலரும் சரியென ஒப்புக்கொண்டு, “அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப்புக்குழி” என்று தொடங்கினார். அவரின் செந்தமிழின் பேச்சைக் கேட்டு, அதை மொழிபெயர்க்க முடியாமல் ஆங்கிலேய மொழிபெயர்ப்பாளர் திணறிப் போனார். கோபமுற்ற நீதிபதி, மீண்டும் ஆறுமுக நாவலரிடம் ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட்டார். ஆனால், ஆறுமுக நாவலரோ மறுத்து தமிழிலேயே கூறினார். அவர் சொன்னதை அவரது சீடர், மொழிபெயர்த்துக் கூறினார்.

“சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர், கடற்கரையோரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்ட போது” என்பதுதான் ஆறுமுக நாவலர் கூறியதற்கு அர்த்தம்.

“வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்தான்” என்பதை 1874-ம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ நூலில் தெளிவுபடுத்தியுள்ளார் நாவலர். இதுதொடர்பாக அந்த நூலில், “மதுபானம் மூலம் ஆங்கிலேயருக்கு ஆண்டுக்குப் பல இலட்ச ரூபாய் வருமானம் வருகிறது.

ஆங்கிலேயர், தமக்கு மதுபானத்தால் எய்தும் பொருளைப் பிறவாயில்கள் சிலவற்றால் எய்துவிக்கத் தலைப்பட்டுக் கொண்டு சாராயத்தை ஒழிப்பாராயின், இலங்கை மக்கள் செல்வமும் ஆரோக்கியமும் அடைவார்கள்” என்று மதுவுக்கு எதிராக அன்றே குரல் கொடுத்துள்ளார். இன்றைய நூற்றாண்டிலும் ஆறுமுக நாவலர் போன்ற தமிழறிஞர்கள் உயிருடன் இருந்திருந்தால், தமிழுக்கு என்றுமே அழிவிருக்காது என்பது நிச்சயம்.


ஜெ.பிரகாஷ்