May 09

சுகாதார துறையில் புரோக்கர்கள்: எம்.எல்.ஏ.,க்கள் புகார்

தமிழக அரசுத் துறைகளில், விஜயபாஸ்கர் அமைச்சராக இருக்கும் சுகாதாரத் துறையில்தான் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக, உளவுத் துறையில் இருந்து, முதல்வர் பழனிச்சாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே நேரம், தன்னை சந்திக்க வரும் எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் அதே கருத்தைச் சொல்ல, முதல்வர் பழனிச்சாமி, அதிர்ந்து போயிருப்பதாக கூறப்படுகிறது.


இது குறித்து, கோட்டை வட்டாரங்கள் கூறியதாவது:மருந்து கொள்முதலில் சிரிஞ்ச் முதல் பஞ்சு வரையில் எல்லாவற்றிலுமே முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக, தமிழக சுகாதாரத் துறை செயல்பாடுகள் மீது, எல்லா மட்டங்களிலும் கடும் அதிருப்தி இருக்கிறது.


இது தொடர்பாக, தமிழக உளவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ரகசியமாக விசாரித்து, அதை ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டுதான் உள்ளனர். இருந்த போதும், துறையில் இருப்பவர்கள், அது குறித்தெல்லாம் கொஞ்சமும் சட்டையே செய்யாமல், தொடர்ந்து அதே காரியங்களையே செய்து வருகின்றனர்.


இப்படி முறைகேடாக குவியும் பணம் அதிகம் இருப்பதால்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் உள்ளிட்ட பல விஷயங்களுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரால், பணத்தை அள்ளி வீச முடிகிறது என்ற குற்றச்சாட்டும், புகார்களும் வருமான வரித் துறையினருக்கு தொடர்ச்சியாக சென்றது, 


சுகாதாரத் துறையின் போஸ்டிங்குகள், டிரான்ஸ்பர்கள் என்று, தினமும் கோடிக்கணக்கான பணம் அங்கிருக்கும் புரோக்கர்கள் மூலம் புரளுவதாக, உளவுத்துறை போலீசாருக்குத் தகவல் கிடைத்து, தினகரனுக்கு உதவியாளர்களாக இருக்கும் இருவர், டி.எம்.எஸ்., ஆபீசில் சூப்பிரண்டாக இருக்கும் ஒருவர் மீது, உளவுத்துறை குற்றச்சாட்டு கூறி, முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளது. 

இதை உறுதி செய்யும் விதமாக, முதல்வர் பழனிச்சாமியை சந்தித்த, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அதே மூவர் குறித்தும், சுகாதாரத் துறையை ஆக்கிரமித்திருக்கும் புரோக்கர்கள் குறித்தும், புகார் மேல் புகார்களை சொல்லியிருக்கின்றனர். 


தென் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர், எழுத்துப்பூர்வமாகவே, முதல்வர் பழனிச்சாமியிடம் புகாராக கொடுக்க, அதிர்ச்சி அடைந்த முதல்வர் பழனிச்சாமி, நடவடிக்கை எடுப்பதாக கூறி, அவரை அனுப்பி வைத்துள்ளார்.


இதையடுத்து, அந்தக் கடிதத்தை, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, முதல்வர் பழனிச்சாமி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வேகமாக களம் இறங்கினால், சுகாதாரத் துறையை வியாபித்திருக்கும் புரோக்கர்கள் பலர் பிடிபடலாம். இவ்வாறு கோட்டை வட்டாரங்கள் கூறின.