May 09

ஐ.பி.எல்.திருவிழா; நிதானமாக ஆடி வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ்

ஐ.பி.எல். தொடரில்  48ஆவது ஆட்டம் ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.

நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர்  ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் லென்டில் சிம்மன்ஸ், பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சிம்மன்ஸ் ஓரு ஓட்டம் எடுத்த நிலையில் மொகமது நபி பந்தில் ஆட்டம் இழந்தார். பார்தீவ் பட்டேல் 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

3ஆவது வீரராக களம் இறங்கிய  ரோகித் சர்மா நிலைத்து நின்று விளையாட, மற்ற வீரர்களான ஹர்திக் பாண்டியா (15), பொல்லார்டு (5), கரண் சர்மா (5) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ரோகித் சர்மா 67 ரன்கள் எடுத்து அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.

சன்ரைசர்ஸ் அணி சார்பில் கவுல் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களைக் குவித்து வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் டி.ஏ. வாரனர் 6 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஹென்ரிக்ஸ் மற்றும் தவான் நிதானமாக விளையாடி ஓட்டங்களைச் சேர்த்தனர்.

ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் ஹென்ரிக்ஸ் 44 ஓட்டங்களை குவித்து வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.