May 09

ஐ.பி.எல்.திருவிழா; நரைன் அபாரம் கொல்கத்தா வெற்றி

ஐ.பி.எல் தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற 46ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்களைச் சேர்த்தது.

அந்த அணியின் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 75 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினார்கள். 

கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள். இருவரும் நடத்திய வாணவேடிக்கையை பார்க்கும்போது ஹைலைட் போட்டியை பார்த்ததுபோல் இருந்தது.

கிறிஸ் லின் முதல் ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். 2ஆவது ஓவரில் சுனில் நரைன் ஒரு பவுண்டரி அடித்தார். 3ஆவது ஓவரை சாஹல் வீசினார் அந்த ஓவரில் லின் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார்.

4ஆவது ஓவரை பத்ரி வீசினார். இந்த ஓவரில் சுனில் நரைன் ஹாட்ரிக் சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். அரவிந்த வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்தார். 5ஆவது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கி அரைசதம் அடித்தார்.

வெறும் 15 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதத்தை எட்டினார் சுனில் நரைன். அரைசதம் அடித்த அவர், கடைசி பந்தையும் பவுண்டரிக்கு தூக்கினார்.

அடுத்த ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் கிறிஸ் லைன் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 105 ஓட்டங்களைக் குவித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி பவர்பிளேயில் அடித்த அதிகபட்ச ஓட்டங்கள்  இதுவாகும்.

7ஆவது ஓவரின் முதல் பந்தில் நரைன் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்தில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 54 ஓட்டங்கள்; குவித்தார். அடுத்து டி கிராண்ட்ஹோம் களம் இறங்கினார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய கிறிஸ் லின் 21 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 22ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார்.

3ஆவது விக்கெட்டுக்கு கௌதம் காம்பீர் களம் இறங்கினார். கிராண்ட் ஹோம் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், காம்பீர் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழக்க யூசுப் பதான், மணீஷ் பாண்டே ஆகியோர் கொல்கத்தா அணி 15.1 ஓவரில் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இதனால் கொல்கத்தா அணி 15.1 ஓவரில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.