May 09

கோடநாடு காவலாளி கொலையாளிகள் அடையாள அணிவகுப்பு நடத்த திட்டம்

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை தொடர்பாக, காயமடைந்த மற்றொரு காவலாளி மூலம், கோவை சிறையில், அடையாள அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது.

கோடநாடு எஸ்டேட் உள்ளே புகுந்த, 11 பேர் கும்பல், காவலாளி ஓம் பகதுாரை கொலை செய்தது; மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுாரை சரமாரியாக தாக்கியது. இதில், காயங்களுடன் உயிர் தப்பியவர், தற்போது, பணிக்கு திரும்பியுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக, கேரளாவில் உள்ள ஹவாலா கும்பலைச் சேர்ந்த மனோஜ், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், சங்கனாசேரியைச் சேர்ந்த சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட ஜம்சீர் அலி, ஜிதின் ஜோய் ஆகியோர், மோசடி வழக்கில், கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு, மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரையும், கோவை மத்திய சிறைக்கு மாற்றும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கி காயமடைந்த சயானின் உடல்நிலை தேறி விட்டதால், அவனை கைது செய்து, சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை, போலீசார் எடுத்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பின், காவலாளி கிருஷ்ண பகதுாரை சிறைக்கு அழைத்து சென்று, அடையாள அணிவகுப்பு நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கொள்ளை கும்பல், மூன்று கார்களில் தப்பிச் சென்ற காட்சிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளில் இருந்து பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது, முக்கிய ஆதாரமாக இருக்கும் என, நம்பும் போலீசார், சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்துவது, வழக்குக்கு மேலும் வலு சேர்க்கும் எனவும் தெரிவித்தனர்.