Dec 12

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிக்கவோ, தண்டனையை குறைக்கவோ முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது என்று சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யலாமா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜனவரி 24-ம் தேதி கூடுதல் பதில் அளிக்க சிபிஐ, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை 2018 ஜனவரி மாதம் 26-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. சோனியா காந்தியின் பரிந்துரையால் நளினியின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் மற்ற மூவரின் தூக்கு தண்டனைக்கு கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க, மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மற்றவர்களின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றமும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் எதற்கு என்று தெரியாமல் பேட்டரி வாங்கிக்கொடுத்த பேரறிவாளன் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இதனையடுத்து தற்போதைய சுழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தொடர்பான சிபிஐ சிறப்புக்குழு விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிற்குத் தர உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜனவரி 24-ம் தேதி கூடுதல் பதில் அளிக்க சி.பி.ஐ மற்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.