May 09

ஐ.பி.எல் திருவிழா; சன்ரைசர்ஸ்ஸை வீழ்த்தியது புனே

ஐ.பி.எல். தொடரின் 44ஆவது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பை தெரிவு செய்தது.

ஆரம்ப வீரர்களாக ரகானேவும், திரிபாதியும் களம் இறங்கினார்கள். அதிரடி வீரர் திரிபாதி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க  பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 25 பந்தில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 39 ஓட்டங்களை எடுத்தார். 

ஸ்மித் (34) ரகானே (22) டோனி (31) ஓட்டங்களைச் சேர்க்க ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் 149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கியது. புனே அணி வீரர்கள் நேர்த்தியாக பந்து வீசினார்கள். இதனால் தொடக்க வீரர்களான தவான் மற்றும் வோர்னர் ஆகியோரால் அதிரடியாக விளையாட முடியவில்லை.

துவான் (19) கேன் வில்லியம்சன் (04), வோர்னர் (40  ஆட்டமிழக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

கடைசி மூன்று ஓவரில் 32 ஓட்டங்கள்  தேவைப்பட்ட நிலையில்யுவராஜ் சிங் (47) ஆட்டமிழந்தார். கடைசி இரண்டு ஓவரில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் வீசிய 19ஆவது ஓவரில் ஐதராபாத் அணி 9 ஓட்டங்கள் சேர்த்தது. 

இதனால் கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது, இந்த ஓவரை உனத்கட் வீசினார். 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது என தொடர்ச்சியாக மூன்று பந்தில் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனைப் படைத்தார்.

கடைசி இரண்டு பந்திலும் ஓட்டம் ஏதும் அடிக்காததால், ஐதராபாத் அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

இதனால் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புனே 8 வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.