Mar 07

துப்பாக்கிச் சூட்டில் இலங்கை கடற்படைக்கு தொடர்பில்லை: வெளிவிவகார அமைச்சு மறுப்பு

இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், ஆரம்பகட்ட விசாரணைகளில், இலங்கைக் கடற்படைக்குத் தொடர்பில்லை எனத் தெரியவருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

இந்திய மீனவர் கொல்லப்பட்டது குறித்து இந்திய அரசு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் இந்த விஷயத்தை இலங்கை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று வெளியறவு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த முழு விசாரணையை மேற்கொள்வதாக இலங்கை கடற்படை உறுதியளித்துள்ளது எனவெளியுறவுத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில், இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் இலங்கை கடற்படைக்கும் தொடர்பில்லை என்று தெரியவருவதாகத் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், யார் இதில் ஈடுபட்டிருந்தாலும் இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் உள்பட அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தி, இந்திய அதிகாரிகளின் துணையுன் முழு விசாரணை நடத்தி, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் அனைத்து அரசுத் துறையினரும் இந்திய மீனவர்களை மனித நேயத்தோடு நடத்த வேண்டும் என்பதில், இலங்கை அரசு உறுதியாக இருப்பதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.