Dec 08

சிங்கள (மகாவம்ச) பவுத்தம் மீள் பார்வை எழுதியவர் ஜே.எல். தேவானந்தா

(இந்தக் கட்டுரையை எழுதியவர் ஒரு சிங்கள எழுத்தாளர். இக் கட்டுரை  இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டாலும் இப்போது வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கையில்  புத்த மதத்துக்கு முதன்மை இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதி மீண்டும் இடம் பெற்றுள்ளது.  இதற்கு சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள மக்களிடையே காணப்படும் மகாவம்ச சிந்தனையே முக்கிய காரணமாகும். அதன் வரலாற்றுப் பின்னணியை இக்கட்டுரை நன்கு விளக்குகிறது. தமிழாக்கம்-  நக்கீரன்) 

சிறிலங்காவில் கடைப்பிடிக்கப்படும் பவுத்தம், உண்மையில் சிங்கள பவுத்தம் (அல்லது மகாவம்ச - பவுத்தம்) ஆகும்.  தேரவாத பவுத்தம் கடைப்பிடிக்கப்படும் தாய்லாந்து, கம்போதியா போன்ற நாடுகளுக்கு வேறுபட்ட மதமாகும்.    இந்த நாடுகளில் வாழும் பவுத்தர்கள் பவுத்தமத மறைநூலான திரிபீடகம்  (முக்கூடை) (1. சுத்த பீடகம் 2. வினைய பீடகம் 3. அபிதம்ம பீடகம்)  ஒன்றையே பின்பற்றுகிறார்கள். அதேவேளை சிறிலங்காவில் புத்தர் நிர்வாணம் அடைந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மகாவிகாரை தேரர்களில் ஒருவரான மகாநாம தேரர் அவர்களால் எழுதப்பட்ட மகாவம்சம்  பவுத்த மறை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  எனினும்  மகாவம்வம் பெரும்பாலும்  பவுத்த மதத்தின் புராண அல்லது  இயற்கைக்கு மாறான  வரலாற்றைக் கூறுகிறது. திரிபீடகம் மற்றும் மகாவம்சம் இரண்டும் பாளி மொழியில் எழுதப்பட்டவையாகும். பாளி மொழியை படித்திராத ஒரு சாதாரண பவுத்தன்  இந்த இரண்டுக்கும் (திரிபீடகம், மகாவம்சம்) இடையிலான வேறுபாட்டை அறியமாட்டான். எனவே அவன் அல்லது அவள் பவுத்த தேரர்கள் போதிப்பவை எல்லாம்  புத்தரின் உண்மையான வாய்மொழி என நம்புகிறான் அல்லது நம்புகிறாள்.

அறியாமை காரணமாக, சிங்கள பவுத்தர்கள் இன்றும்  தாங்கள் புத்தரின் இரத்த உறவினர்கள் என  நம்புகின்றனர்.  காரணம், மகாவம்சம் அவர்களின் (சிங்களவர்களின்)  மூதாதையான  பாண்டு வாசுதேவன் சாக்கிய குலத்தைச் சேர்ந்தவன் என்றும் புத்தரது   உறவினன் என்றும்  சொல்லுகிறது. ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் பாண்டு என்ற சொல் பாளி மொழியில்  பாண்டியர்களைக் குறிப்பதாகக் கூறுகிறார்கள்.

பவுத்த மதத்தின் படி ஒருவர் ஒரு பவுத்த தேரராக (சங்கத்தில்) தீட்சை பெற்ற பின்னர் அவர் அகிம்சை (பிற உயிர்க்கு தீங்கு செய்யாமை) கருணை (தாட்சண்யம்) மெத்தா (அன்புள்ள கருணை) மற்றும் மயித்திரிய (தயவு)  போன்றவற்றை இனம், சமயம் கடந்து வாயளவில் இல்லாது மனத்தினாலும் நடத்தையினாலும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். நற்பேறு இல்லாததால்,  மகாவம்சத்தின் செல்வாக்கால், ஒரு பவுத்த தேரர் இனவாத அரசியலில் ஈடுபடவும் நாங்கள் இன்று பார்ப்பதுபோல சிங்கள - பவுத்த பேரினவாதம் மற்றும் வெறுப்புணர்வை வளர்ப்பதற்கும் அவருக்குச் சுதந்திரம் இருக்கிறது.

கிமு இரண்டாம் நூற்றாண்டில் மகிந்த தேரரின் தலைமையில் பேரரசர் அசோகன் பவுத்த தேரர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். அதுமட்டும் இங்கு (இலங்கையில்) பவுத்தம்  இருக்கவில்லை.  மகிந்த தேரரே இந்து (சைவ சமயம்) மதத்தில் இருந்த நாகர்குல அரசனான (தேவநம்பிய)  தீசனை பவுத்த சமயத்துக்கு மாற்றினார். அதே போல்  கிபி 5 ஆம் நூற்றாண்டில் மகாவிகாரையில் இருந்த தேரர்கள் சிங்கள இனத்தையும் / குலத்தையும் உருவாக்கும் வரை சிங்கள இனமோ / குலமோ இலங்கையில் இருக்கவில்லை.  இந்து/ பிராமணிய செல்வாக்கு பவுத்த மதத்துக்கு ஒரு  பெரிய அறைகூவலாக  எழுந்து   பவுத்தம் மக்களிடையும் மன்னர்களிடையும்   தனது  செல்வாக்கை இழக்கத் தொடங்கியபோது இந்தியா முழுதும் பவுத்த நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. அனுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை தேரர்கள்  (பாளி மொழியில் மகாவம்சத்தை எழுதிவரும்  பவுத்த நாகர்குல   அரசனான தாதுசேனனின்  நெருங்கிய உறவினருமான   வண. மகாநாம தேரர் உட்பட) இந்தியாவில் பவுத்த மதம்  சரிவடைவதையும் தன்னிலை இழப்பதையும் கண்டார்கள்.  பவுத்தத்திற்கு எதிராக இந்தியாவில் ஏற்பட்ட சம்பவங்கள் இலங்கை மகாவிகாரையில் வாழ்ந்த தேரர்களைப் பவுத்த சமயத்தைக் காப்பாற்றுவதற்கான உத்தியையும் /மூலோபாயத்தையும் வகுக்கத் தூண்டியிருக்க வேண்டும். சிறிலங்காவில் புத்த சமயத்தைக் காப்பாற்ற வேண்டும்  அதனை வலுப்படுத்த வேண்டும் என்ற அவர்களது கடுமையான ஈடுபாடு    காரணமாக  மகாவம்சம் / தீபவம்சம் போன்ற வரலாற்று நூல்களை எழுத முடிவு செய்தார்கள். அதன் மூலம் சிறிலங்காவை ஒரு தம்மதீப /சிங்களதீப (புத்தரால் தெரிவு செய்யப்பட்ட பூமி. அதில் பவுத்தம் 5,000 ஆண்டுகள் நிலைதிருக்கும்) ஆக மாற்ற  அதில் வாழும் பல்வேறு  இனக் குழுக்களை /குலங்களை ஒன்றிணைத்து  சிங்கள இனத்தை  (கவுதம புத்தர் தேர்ந்தெடுத்த மக்கள்) உருவாக்கி பவுத்த மதத்தை,  அடுத்த மயித்திரிய புத்தர் வரும்வரை  5,000  ஆண்டுகளுக்கு சிறிலங்காவில்  பாதுகாப்பதற்குத் திட்டமிட்டார்கள்.

பவுத்த மன்னர்களின் ஆதரவோடு மகாவிகாரை தேரர்களே  வெவ்வேறு குலங்களில் காணப்பட்ட பவுத்தர்களை தன்மயமாக்கி (assimilate) அவர்களை சிகல ( கற்பனைப் பாத்திரமான விஜயனின் சந்ததிகள்) என அழைத்தார்கள்.  இந்தியாவில் (வங்காளம்/ குஜராத்) இருந்து  தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், நாடு கடத்தப்பட்டவர்கள்  இலங்கைத் தீவில் புகலிடம் கேட்டிருக்கலாம். அவர்கள் அங்கு குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் நாளடைவில் உள்ளூர் மக்களோடு கலந்து போயிருப்பார்கள். ஆனால் விஜயன் தனது 700 தோழர்களோடு இலங்கைக்கு வந்தபோது  அங்கு சிங்களவர்கள் இருந்தார்கள் என்பதற்கான  பழைய வரலாற்றுச் சான்றுகள்  கிடையவே  கிடையாது.

'சிகல' என்ற சொல்  முதன் முதலாக கிபி 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  தீபவம்சம் / மகாவம்சம் என்ற புராண வரலாற்று நூல்களிலேயே காணப்படுகிறது. அதுவும் தொடக்க அதிகாரங்களில் இரண்டுமுறைதான் வருகிறது.  இன்று மட்டும் 'ஹெல' அல்லது 'சிகல' அல்லது 'சிங்கள' மக்கள் விஜயன் வருகைக்கு முன்னர் (இலங்கையில்) இருந்ததாக தொல்லியல் சான்று எதுவும் கிடைக்கவில்லை. பின்னாளில் மகாவம்ச நூலுக்கு உரை எழுதப்பட்ட மகாவம்ச திக்கா என்ற நூலில் மட்டும் மர்மமான 'வம்ச பாடங்கள்'  'சிங்கள அத்தகத்தாய' (வாய்வழி வந்த கதைகள்) இல் இருந்து தத்தெடுத்ததாகக் கூறுகிறது. மிகவும் விசித்திரமாக இந்த சிங்கள அத்தகத்தாய என்ற நூலில் காணப்படும் கதைகள் இந்திய இதிகாசங்கள் (மகாபாரதம், இராமாயணம்)  மற்றும் புராணங்களில் காணப்படும் கதைகளை ஒத்ததாகவே இருக்கின்றன. உச்சக் கட்டமாக மகாவம்சம்  புத்தரை இலங்கையில் இன அடிப்படையில் உருவாக்கப்பட்ட  சிங்கள - பவுத்தத்தின் ஒரு சிறப்பான புரவலர் ஆக  மாற்றிவிட்டது.

சிங்கள மற்றும் தெமெல

இலங்கையில் ஏராளமான தொல்பொருள் சான்றுகள் - உதாரணமாக பிராமி கல்வெட்டுக்கள், குகை எழுத்துக்கள், பாளி புராண வரலாறுகள் போன்றவை  'தமிட, தெமில, தமில, தெமிழ் போன்ற  சொற்கள்  (இலங்கைத் தீவில்)  வாழ்ந்த ஒரு தொகுதி மக்களைக் குறிக்கிறது. ஜாதக கதைகளிலும் தமிழ் நாடு (தெமில றட்ட) பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் ஹெல, சிகல, சிங்கள போன்ற சொற்கள் கிறித்துவுக்கு முன்னரான சில நூற்றாண்டுகளிலும் பாளி மொழியில்   மகாவம்சம்  எழுதப்பட்ட கிபி சில நூற்றாண்டுகள் வரையும்  பயன்பாட்டில் இருந்ததாக எந்தவித சான்றுகளும் கிடைக்கவில்லை. மகாவம்சம் கூட மகிந்த மகா தேரர் இலங்கைத் தீவிலுள்ளவர்களுக்கு உபதேசம் செய்த போது  தீப பாசையில் ( தீவின் பாசை)  செய்ததாகக் கூறுகிறது. ஆனால் தீப பாசை என்ற அந்தப் பாசை 'எலு' அல்லது 'ஹெல' அல்லது  'சிகல' பாசை எனக் கூறப்படவில்லை.

இது பற்றிச் சில சிங்கள புலமையாளர்கள்  மேலேயுள்ள பலவீனமான வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆதிக்கக் குழுவின்   பெயர் இந்தப் பதிவுகளில் இடம்பெறாது  இருப்பதற்கு தக்க நியாயம் இருக்கிறது என வாதிடுகின்றனர். எல்லோரும்  சிகல என்ற பெயருக்கு உரித்துடையவர்களாக இருந்தால் எந்தவொரு ஆளையும்   அவன்/அவள் என வேறுபடுத்தி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள்.   மில்லியன் டொலர் கேள்வி என்னவென்றால்  இன்று கூட பெரும்பான்மையராக (அவர்கள் எப்படிப் பெரும்பான்மையாராக வந்தார்கள் என்பது வேறு கதை.   கீழே அதுபற்றிச் சுருக்கமாகக் குறிபிடுவேன்)  இருக்கும் (சிங்களவர்கள்)  அவர்களுக்கு ஏன் பெயர் (சிங்களவர்) இருக்க வேண்டும்? இன்று மருந்து போன்ற முக்கிய பொருள் மட்டுமல்ல வீட்டுக் கூரைகூட சிங்களத்தில்தான்  பெயரிடப் பட்டுள்ளன.

'ஹெல' 'சிகல'  'சிங்கள'  போன்ற சொற்கள் சிறிலங்காவுக்கு வெளியே எங்காவது காணப்பட்டால், குறைந்தபட்சம்  இலங்கைத் தீவின் வரலாற்றோடு எப்போதும் தொடர்புடைய இந்திய நாட்டின் (தெற்கு அல்லது வடக்கு) இலக்கியம் - கல்வெட்டு - பாறைவெட்டுப்  போன்றவற்றில் காணப்பட்டிருந்தால் மேலே கூறப்பட்ட வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். பெறுபேறின்மையால்  (unfortunately) இதுவரை ஒன்றுமே கண்டறியப் படவில்லை. 

அனுராதபுரம்  மற்றும் பொலனறுவை இராச்சியங்கள் சிங்கள இராச்சியங்கள் என அறியப்படவில்லை. இந்த இராச்சியங்களை ஆண்ட நாகர் மற்றும் தமிழ் அரசர்கள் தங்களை 'ஹெல' 'சிகல' அல்லது  'சிங்கள' என்று   அழைக்கவில்லை. நாகர்கள் சிங்களவர்கள் என்றோ அல்லது சிங்களவர்களாக மாறினார்கள் என்றோ கணிக்கப்பட எந்தச் சான்றும் இல்லை.  பத்தாம் நூற்றாண்டில் சோழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போது பவுத்தர்கள் ஆகவும்  சிங்களவர்கள் ஆகவும் இருந்தவர்கள் தங்களது பழைய அனுராதபுரம் மற்றும்  பொலநறுவை  இராச்சியங்களைக் கைவிட்டு  இலங்கையின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளுக்கு தங்கள் இராச்சியத்தை இடம் மாற்றினார்கள்.  தங்களை இந்துக்களாகவும் தமிழர்களாகவும் அடையாளம் கண்டவர்கள் தங்களது ஆட்சியை இலங்கைத் தீவின் வடக்கு  கிழக்குக்கு இடம் மாற்றினார்கள். 13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே கோட்டை மற்றும் கண்டி இராச்சிங்கள் 'சிங்கள' இராச்சியங்கள் என அழைக்கப்பட்டன. இருந்தும் கிழக்கு கண்டி இராச்சியத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் அதனை தென் - கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த கலிங்கரும்  தென்னிந்தியாவைச் சார்ந்த நாயக்கர்களும் ஆட்சி செய்தார்கள். இவர்களோடு தமிழர்களுக்கு எந்தச் சிக்கல்களும் இருக்கவில்லை. மேலும் ' சிங்கள' என்ற சொல் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட  சூளவம்சத்தில் மட்டும் தோற்றம்பெற்றது. தீபவம்சம் / மகாவம்சத்தில் சிங்கள என்ற சொல் காணப்படவில்லை.

இலங்கையைப்  பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரும் பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரும் கைப்பற்றி ஆண்ட காலத்தில்  தென் இந்தியாவில் (இன்றைய கேரளா, தமிழ் நாடு, ஆந்திரா)  இருந்து   குற்றேவல் செய்வதற்குக்  பல்லாயிரக்கணக்கணக்கில்  கூலிகளாக அழைத்து வந்து தீவின் தென்பகுதியில் குடியமர்த்தினார்கள். இவர்கள் கறுவா வளர்ப்பது / உரிப்பது, மீன்பிடித்தல் /முத்துக் குளித்தல், தென்னை நடுதல் / தேங்காய் பறித்தல், கள் இறக்குதல் போன்ற பல தொழில்களில் ஈடுபட்டார்கள். 

சில நூற்றாண்டுகளுக்குள்  இவர்கள் உள்ளூர் சிங்களவர்களது மொழி, மதம் இரண்டையும் தமதாக ஏற்றுக் கொண்டு சிங்கவளர்களோடு கலந்து கொண்டதால் சிங்களவர்களது மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்தது. இன்று அவர்களது சந்ததிகள் (ஆறாவது தலைமுறை) இலங்கையின் புராதன நாகரிகத்தைத் தங்களது 'சிங்கள' பாரம்பரியமாக ஏற்றுக் கொண்டதும் அல்லாமல்  சிங்கள - பவுத்த பேரினவாதத்தின்  தேசபக்தர்களாகவும்  வீரஆதரவாளர்களாகவும்  மாறிவிட்டார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானியர்களே மகாவம்சம் என்ற நூலை மீள் கண்டுபிடித்தார்கள். அவர்களது பாளி  மொழிபெயர்ப்பாளர்கள் அதனைத் தவறாக மொழிபெயர்க்கவும் செய்தார்கள். இதனால் ஆரிய - சிங்கள என்ற மற்றொரு கட்டுக்கதையை உருவாக்கினார்கள்.  சிங்களம் (எலு) மொழி (சமற்கிருதம், பாளி, தமிழ் / மலையாள மொழிகளின் கலவை) இந்தோ - ஐரோப்பிய மொழி போல் இருந்த காரணத்தால், பிரித்தானியர் சிங்களவர்களை வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்கள் என அறிவித்தார்கள். அதேபோல் தமிழர்களைத் தென்னிந்தியாவில் இருந்து வந்த திராவிடர் எனச் சொன்னார்கள். கொலனி வரலாற்று மேலாண்மையின் செல்வாக்குக் காரணமாக சிங்களவர்கள் தாங்கள் இலங்கைத் தீவின் பூர்வீக குடிமக்கள் எனவும் தமிழர்கள்  தென்னிந்தியாவில் இருந்து வந்த  படையெடுப்பாளர்கள் எனவும்  அறிவித்தனர்.  (வளரும்)