Mar 06

அமெரிக்க உளவுத்துறையை கடுமையாக விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப்

குடியேற்றக் கொள்கைகள் குறித்த அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையை அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.  ஏழு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தற்காலிக தடையை அறிமுகம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு நாட்டின் குடிமக்களாக இருப்பதாலேயே அவர்கள் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சாத்தியம் இருப்பதாக சொல்வது நம்பத்தக்க காரணியாக இருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க உளவுத்துறை அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

உளவுத்துறையின் இந்த அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டதாகவும் தவறாக  ஆராயப்பட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை அமெரிக்க ஊடகங்களில் எவ்வாறு கசிந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவதற்குள்ள தடையை செயல்படுத்த உத்தரவிட்ட அதிபர் டிரம்ப்பின் நிர்வாக ஆணையை, இந்த மாதத்தின் தொடக்கத்தில், வாஷிங்டனில் உள்ள ஒரு பெடரல் நீதிபதி நிறுத்தி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.